2 பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்! ஆண் நண்பரின் பழக்கத்தால் நடந்த விபரீதம்

ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த கிரிஜா. இவர் கணவனை இழந்து தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்று 2 மகன்களை வளர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை திடீரென இரண்டு மகன்களுக்கும் விஷ ஊசியைப் போட்டு கொன்றுவிட்டு இவரும் தற்கொலை செய்திருப்பது அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுபற்றி அப்பகுதியில் விசாரித்தபோது, ''கிரிஜா வயது 34. அவரின் கணவர் பெயர் ரவீந்தரன். இவர்களுக்கு பிரனீஸ், சதீஷ் என்ற இரண்டு மகன்கள். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் ரவீந்தரன் இறந்துவிட்டார். அதையடுத்து கிரிஜா வீரப்பன்பாளையத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளை வளர்த்து வந்தார். மூத்த மகன் பிரனீஸ் வயது 6, இளைய மகன் சதீஷ் வயது 4. குடும்பத்தை மிகவும் சிரமப்பட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் ராயவேலூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்தது. இருவரும் கணவன், மனைவியைப்போல வாழ்ந்து வந்தார்கள்.

இந்நிலையில் ரஞ்சித்துக்கு அவருடைய வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்ய முயற்சி செய்தார்கள். இத்தகவல் கிரிஜாவுக்குத் தெரியவர ரஞ்சித்திடம் இந்தத் திருமணம் வேண்டாம் என்று சொல்லும்படி வலியுறுத்தி இருக்கிறார். தன் குடும்பத்தினரின் பேச்சைத் தட்ட முடியாது என்று தட்டிக் கழிக்கவே மனம் உடைந்த கிரிஜா தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் விஷ ஊசியைப் போட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!