காதலர்கள் என்ற பெயரில் எல்லை மீறுகிறார்கள்! - கோவை வேளாண் பல்கலைக்கழகம் `பளிச்' விளக்கம்

கோவை தாவரவியல் பூங்கா

கோவை வேளாண் கல்லூரிக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் காதலர்களை அனுமதிக்க மறுப்பதாகவும் திருமண ஜோடிகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்துவதாகவும் வெளியாகியுள்ள தகவல் கோவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வேளாண் கல்லூரி வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இவ்வளவு நாளாகப் பொதுமக்கள் பார்வைக்கு மட்டுமல்லாது காதலர்களுக்குப் புகலிடமாகவும் விளங்கிவந்தது அந்தப் பூங்கா. இந்நிலையில் பூங்காவில் நுழைய வேளாண் கல்லூரி நிர்வாகம் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. குறிப்பாக, காதலர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் திருமணமான ஜோடிகள் தாலியையும் மெட்டியையும் காட்ட வேண்டும். அல்லது மேரேஜ் சர்டிஃபிகேட்டை காட்ட வேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் கறார் காட்டியதாகச் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் முளைத்து வருகிறது. ஆனால், கல்லூரி நிர்வாகமோ நாங்கள் அப்படிச் சொல்லவில்லை எல்லோரும் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்துவருகிறது.

இது தொடர்பாக மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறைத் தலைவரும் பேராசிரியருமான கண்ணனிடம் பேசினோம், "நாங்கள் யாரிடமும் மேரேஜ் சர்டிஃபிகேட்டும் கேட்கவில்லை, தாலியைக் காட்டுங்கள் என்றும் சொல்லவில்லை. இந்தப் பூங்காவினுள் மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை, மருந்து பயிர்கள் துறை என வேளாண் கல்லூரியின் இரண்டு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு துறை மாணவர்களும் படிப்பு சார்ந்து பூங்காவினுள் அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.

 கல்லூரிக்குச் சொந்தமானதாக இருந்தாலும் நகரின் மத்தியப்பகுதியில் இருப்பதால் பூங்காவுக்குள் பொதுமக்களையும் அனுமதித்து வந்தோம். இங்கு இருக்கும் 800 வகையான தாவரங்களைப் பார்த்து அதைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அதன் அழகை ரசிக்கவும்தான் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காதலர்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் கல்லூரி மாணவ - மாணவிகள் பெரும்பாலானோர் எல்லை மீறுகிறார்கள். இதனால் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பூங்காவின் உண்மையான நோக்கமும் சிதைக்கப்படுகிறது. ஆகையால்தான் சந்தேகத்துக்கு இடமான கல்லூரி மாணவ - மாணவிகளிடம் அவர்களின் ஐ.டி கார்டை பரிசோதித்து அனுப்பினோம். மற்றபடி திருமண ஜோடிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இது தொடர்பாக 2015-ம் ஆண்டே பூங்கா நுழைவாயிலில் பூங்காவுக்குள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும், ஒவ்வொருவரும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று நோட்டீஸ் வைத்துள்ளோம். இப்போது தேவையில்லாமல் இந்தப் பிரச்னையைத் திரித்து திசைதிருப்புகிறார்கள்'' என்றார் தெளிவாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!