வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (29/01/2018)

கடைசி தொடர்பு:19:30 (29/01/2018)

`பிறந்ததில் இருந்தே அரசியலில் உள்ளேன்' - அலங்காநல்லூரில் கலகலத்த உதயநிதி

மதுரையில் இன்று பல்வேறு இடங்களில் பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கூறி தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியினர் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினர் . தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் சாலை மறியல் நடைபெற்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் கைதான தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார். வாடிப்பட்டி , சோழவந்தான் உள்ளிட்ட இடங்களில் கைதான தொண்டர்களைச் சந்தித்த பின் அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என ஆசைப்பட்டேன். சினிமா படப்பிடிப்பின் காரணமாக வரமுடியவில்லை. அதனால் கைதான தொண்டர்களைச் சந்திக்க வந்தேன். இரண்டு நாள்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 
நான் அரசியலுக்குத் திடீரென்று வரவில்லை; பிறந்ததில் இருந்தே அரசியலில் உள்ளேன். கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன். என்னுடைய சினிமாக்களுக்கு வரிவிலக்கு வழங்காத சூட்சுமத்தை வைத்து அறிந்துகொள்ளலாம்.

கமல், ரஜினி அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். என்னுடையை படப்பிடிப்புகள் அனைத்தும் அரசியலைச் சார்ந்தே அமையும். பேருந்துக் கட்டணத்தை 100 சதவிகிதம் உயர்த்திவிட்டு, தற்போது 1 சதவிகிதம் குறைப்பது கண் துடைப்பு செய்துள்ளது . தி.மு.க ஆட்சியில் தான் எல்லா தவறுகளும் நடந்தன என்று கூறிவருகிறீர்கள். அப்போ நீங்கள் என்ன நல்ல காரியம் செய்தீர்கள். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின்போது என்ன முடிவு செய்தீர்கள். அதில்கூட நீதிமன்றம்தான் நடவடிக்கைகள் எடுத்தது ஆளும்கட்சி அமைதியாகத்தான் இருந்தது எனக் காட்டம் தெரிவித்தார் .