’’காதில் பூ.. கையில் காலிக்குடம்!’’ - கோவில்பட்டியில் த.மா.க ஆர்ப்பாட்டம்

தமிழக அரசையும், கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தைக்  கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவில்பட்டியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் காதில் பூச்சுற்றி, கையில் காலிக்குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி நகரின் குடிநீர்த் தேவையைப் போக்கிட 2-வது குடிநீர்த் திட்டப்பணிகளை முடிக்காமலே இத்திட்டம் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தமிழக அரசும், நகராட்சி நிர்வாகமும் மக்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீடு தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் காதில் பூச்சுற்றி, கையில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவில்பட்டி நகர த.மா.க தலைவர் ராஜகோபால், “ கோவில்பட்டி மக்களின் நீண்டகால பிரச்னையே குடிநீர் பிரச்னைதான். இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி, தாமிரபரணியில் உறைகிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு கோவில்பட்டிக்குக் கொண்டு வந்து நகராட்சிக் குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும் நோக்கில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் இத்திட்டம் முழுமையடையவில்லை. சீவலப்பேரி – கோவில்பட்டி வரை குடிநீருக்காக பைப் லைன் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஆனால், கோவில்பட்டி நகர்ப் பகுதிகளில் 2-வது குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீரை விநியோகம் செய்திட 84 கி.மீ தூரத்திற்கு பைப் அமைக்கப்படவில்லை.

திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சில மேல்நிலை தேக்கத் தொட்டிகளும் கட்டி முடிக்கப்படவில்லை. இத் திட்டப்பணிகள் முடிவடைய இன்னும் பல மாதம் ஆகும் நிலையில், அடுத்தமாதம் 2வது குடிநீர்த் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூவும், நகராட்சி நிர்வாகமும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்களைத் தொடர்ந்து ஏமாற்றாமல் 2-வது குடிநீர்த் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள கட்டடங்களை அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாமல், அளந்து அனைத்துப் பகுதிகளிலும் தன்னிச்சையாக வரியை உயர்த்தியும், வரியை உயர்த்துவது போல கூடுதல் வரியை வசூல் செய்வதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீடு தொகையை விரைந்து வழங்கிட வேண்டும்.” என்றார்.  ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காதுகளில் பூச்சுற்றி, கைகளில் காலிக்குடங்களை ஏந்தி நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!