'ஒரு லட்சம் கொடுத்துட்டோம்; பள்ளிக்கு இடம், தளவாடப் பொருள்கள் தயார்!'- கல்விக்காகப் போராடும் பெற்றோர்கள்

அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த கோரி மாணவ, மாணவிகள் போராட்டம், பெற்றோர்கள் உண்ணாவிரதம் என ஜெயங்கொண்டம் பகுதியே பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.

                                       
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள த.குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை, உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் எனக் கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். அதற்கு அதிகாரிகள் டெபாசிட் பணத்தைக் கட்ட சொல்லியிருக்கிறார்கள். கிராம மக்களின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அப்போதே அரசுக்குப் பணம் கட்டப்பட்டுள்ளது.

                                

அதுமட்டுமல்லாமல் பள்ளிக்குத் தேவையான இடம் மற்றும் தளவாடப் பெருள்கள் ஆகியவை கிராம மக்கள் சார்பில் வாங்கித் தயாராக வைத்துள்ள நிலையில், அரசு இன்று வரையிலும் பள்ளியை தரம் உயர்த்தவில்லை என்று மாணவ,மாணவிகள் இரண்டு நாள்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் பள்ளியில் படிக்கும் 170 மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் இன்று (29.1.2018) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                             

உண்ணாவிரம் இருந்துவரும் முருகேஷ் என்பவரிடம் பேசினோம். "இந்தப் பள்ளி 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியாகத் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்தப் பள்ளியில் 164 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

                        
அதிகாரிகளின் அலட்சியத்தால் எங்கள் பிள்ளைகள் உயர் கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். நாங்கள் 2015-ம் ஆண்டு முதலே பள்ளியைத் தரம் உயர்த்தக் கோரி போராடி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் எங்கள் கோரிக்கையைக் காதில் வாங்க மறுக்கிறார்கள். அரசிடம் பணம் இல்லை என்பதால்தான் தரம் உயர்த்த மறுக்கிறார்கள் என்று கிராம மக்களே இணைந்து பணம் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்துதான் இந்த உண்ணாவிரதம். இனியும்  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களுடைய போராட்டம்  விஸ்வரூபம் எடுக்கும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!