வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/01/2018)

கடைசி தொடர்பு:21:30 (29/01/2018)

அரசுக் குற்றவியல் வழக்கறிஞர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாகத் திறமை, தகுதியைக் கருத்தில் கொள்ளாமல் ஆளும்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் பதவிக்கு வந்த பிறகும் தங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களின் பணி அனுபவம் குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், மதுரைக் கிளை பதிவாளர் (நீதி) ஆகியோர் ஆய்வு செய்யவும், அரசு வழக்கறிஞர்களின் முன்நடத்தை குறித்து ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய டி.ஜி.பி-க்கும் உத்தரவிட வேண்டும். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாகப் பொதுத்துறை முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, அனைத்து வழக்கறிஞர்களிடமும் விண்ணப்பம் பெற்று அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமன அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு, உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றினால்தானே, அனுபவம் பெற்று அரசு வழக்கறிஞர்களாகச் சிறப்பாகப் பணியாற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் அரசுக் குற்றவியல் வழக்கறிஞர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், நியமனம் செய்யப்பட்டவர்கள் எத்தனை ஆண்டுகள் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளனர். எத்தனை வழக்குகளில் வாதாடியுள்ளனர் என்பது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் அரசுக் குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறித்து சட்டத்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.