"ஈஷா யோகா மையத்திடமிருந்து நிலத்தை மீட்டுத்தாருங்கள்" - கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு!

கோவை, முட்டத்துவயல் பகுதியில் ஈஷா நிர்வாகம், ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் சங்கத்தினர், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள முட்டத்துவயல் பகுதியில் அமெரிக்க கவுண்டர் என்ற முத்துச்சாமி என்பவருக்குச் சொந்தமான 44.30 ஏக்கர் நிலம், நில உச்ச வரம்பு சட்டப்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 1992-ம் ஆண்டு 46 பேருக்கு அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பழங்குடியின மற்றும் பட்டியல் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் அபகரித்ததாகப் புகார் எழுந்தது.

இதை எதிர்த்து பல்வேறுஅரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் பயன்படுத்த  முயற்சி செய்து வருவதாக, வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் சங்கம் மற்றும் சமூக நீதிக்கட்சி சார்பில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூகநீதிக் கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஆதியோகி சிலையைத் திறந்து வைப்பதற்காக, பிரதமர் மோடி வந்தபோது, ஹெலிபேடுக்காக அந்த இடத்தை தூய்மைப்படுத்தியதாகக் கூறினர். இதுதொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை பயன்படுத்த ஈஷா நிர்வாகம் மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இதனால், பழங்குடி மக்கள் அந்த நிலத்தில் வீடு கட்டமுடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, அந்த நிலத்தை ஈஷாவிடமிருந்து மீட்டு, பழங்குடி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!