வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (29/01/2018)

கடைசி தொடர்பு:22:30 (29/01/2018)

ராமேஸ்வரத்தில் ஆமை முட்டை சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட பயிற்சி வனச்சரகர்கள்!

 தனுஷ்கோடி பகுதியில் கொட்டும் பனியில் குளிரும் காற்று வீசும் அதிகாலை வேலையில் ஆமை முட்டை சேகரிப்பில் வெளிமாநிலப் பயிற்சி வனச்சரகர்கள் ஈடுபட்டனர்.

ஆமை முட்டை சேகரிப்பில் ஈடுபட்ட வெளிமாநில வன அலுவலர்கள்

கடல் சூழலியல் காப்பாளானாக விளங்குவது கடல் ஆமைகள் ஆகும். இந்தியக் கடல் பகுதிகளில் 5 வகையான ஆமைகள் உள்ளன. இந்த ஆமைகள் கடலில் வசித்தாலும் குஞ்சு பொறிக்கும் காலங்களில் தங்கள் முட்டைகளை கடற்கரையோரங்களில் உள்ள மணல் பகுதிகளில் ஆழ குழிதோண்டி அதில் முட்டைகளை இட்டு செல்வதை வழக்கமாக கொண்டவை. மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி தொடங்கி தூத்துக்குடி வரையில் உள்ள கடலோரப் பகுதிகளை கடல் ஆமைகள் குஞ்சு பொறிப்பதற்கான பகுதியாகப் பயன்படுத்தி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை ஆமைகள் குஞ்சு பொறிப்பதற்கான காலமாக உள்ளது.

ஆமை முட்டையினை பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கும் காட்சி

இந்நிலையில் கடந்த மாதம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடத் தொடங்கியுள்ளன. கடலிலிருந்து கரையோர மணலில் குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகளை ஆமைகள் விட்டுச் சென்றபின் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்கள் அவற்றை சேகரித்துப் பாதுகாப்பான இடத்தில் வைத்து குஞ்சு பொறிக்க வைக்கின்றனர். இதற்கென அரிச்சல்முனைப் பகுதியில் குஞ்சு பொறிப்பகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மஹாராஷ்டிரா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி வனச்சரக அலுவலர்கள் மஹாராஷ்டிராவில் உள்ள குண்டல் அகாடமியிலிருந்து பயிற்சிக்காக ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் இன்று அதிகாலை நேரத்தில் கொட்டும் பனி மற்றும் குளிரும் கடல் காற்றுக்கு இடையே ஆமை முட்டைகளைத் தேடிச் சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதிக்குச் சென்ற இவர்கள் 3 இடங்களில் ஆமைகள் முட்டையிட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இடங்களை ஆய்வு செய்து அவற்றிலிருந்து 374 முட்டைகளைச் சேகரித்தனர். பின்னர் சேகரிக்கப்பட்ட முட்டைகள் அனைத்தையும் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்களால் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை சுமார் 20 இடங்களிலிருந்து 2,435 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு வனச்சரகர் சதீஷ் தெரிவித்தார்.