மோகன்லால், பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம்: கோழிக்கோடு பல்கலைக்கழகம் வழங்கியது | Calicut university confers Doctorate to Mohanlal and P.T.Usha

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (30/01/2018)

கடைசி தொடர்பு:08:51 (30/01/2018)

மோகன்லால், பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம்: கோழிக்கோடு பல்கலைக்கழகம் வழங்கியது

மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவுக்குக் கோழிக்கோடு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது. இருவருமே இந்த மரியாதைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். 

டாக்டர் பட்டம் - மோகன்லால்

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக் கழகத்தின் வேந்தரான கேரள கவர்னர் சதாசிவம், கேரளக் கல்வித்துறை அமைச்சரும் இணை வேந்தருமான ரவீந்திரநாத், துணை வேந்தர் முகமது பஷீர் மற்றும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மலையாள திரைப்பட நடிகர் மோகன்லாலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் கடந்த 40 வருடங்களாக நடித்து வருவதற்காக அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. 

டாக்டர் பட்டம் பெற்ற மோகன்லால் பேசுகையில், ``கோழிக்கோடு எனது சொந்த ஊர். இந்த இடத்தில் கிடைத்திருக்கும் பாராட்டும் கௌரவமும் மிகுந்த நிறைவை அளிக்கிறது. திரைப்படத்தில் நான் நீடித்து வருவதை எனது தனிப்பட்ட வெற்றியாகக் கருதவில்லை. திரைத்துறை என்பதே பலரது கூட்டு முயற்சியால் உருவானதுதான். அதனால் பலரது உழைப்பாலும் கூட்டு முயற்சியாலும் இந்த டாக்டர் பட்டத்துக்கு நான் தேர்வாகி இருப்பதாகவே கருதுகிறேன்’ என்றார். 

’பயோலி எக்ஸ்பிரஸ்’ என வர்ணிக்கப்படும் அதேவேக ஓட்ட மங்கையான பி.டி.உஷாவுக்கு இந்த பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது 53 வயது நிரம்பிய பி.டி.உஷா, இந்திய ரயில்வே துறையில் பணியாற்றுவதுடன், இளம் வீரர்களை உருவாக்கும் வகையில் கோழிக்கோடு நகருக்கு அருகிலேயே அத்லெடிக் பயிற்சி மையத்தையும் நடத்திவருகிறார். 

1980-ம் வருடம் தனது 16-வது வயதில், மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர், பி.டி.உஷா. காமன்வெல்த் போட்டியில் அதி வேகமாக ஓடி சாதனை படைத்த அவர் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் 103 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளார். அவரது சாதனையைக் கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், சொந்த ஊரில் கிடைத்திருக்கும் மரியாதைக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். 


[X] Close

[X] Close