திருவிழா கொண்டாட்டத்தில் இடையூறு செய்த காவல்துறை: முற்றுகைப் போராட்டம் நடத்திய பக்தர்கள்!

நெல்லை மாவட்டம் பணகுடியில் கோயில் விழாவை இரவு 10 மணிக்கு மேல் நடத்திய நிர்வாகிகள்மீது வழக்குத் தொடர்ந்த போலீஸாரைக் கண்டித்து பக்தர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பக்தர்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் பணகுடியில் ராமலிங்க சுவாமி-சிவகாமி அம்பாள் கோயில் உள்ளது. பாரம்பர்யம் மிகுந்த இந்தக் கோயிலில் கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரையிலும் பூஜைகள் கொண்டாட்டம் என களைகட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகளை நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை. 

ஆனால், கரகாட்டம், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களும் கோயில் நிர்வாகத்தினரும் ஏற்பாடு செய்திருந்தனர். எனவே, மீண்டும் காவல்துறையினரிடம் அனுமதி கோரினார்கள். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை அணுகிய கோயில் நிர்வாகத்தினர், பாரம்பர்யமாக நடக்கும் விழா என்பதால், நள்ளிரவுக்கு மேலும் கோயில் விழாவை நடத்திக்கொள்ள அனுமதி பெற்றார்கள்.

கோயில் நிர்வாகத்தினர் நீதிமன்ற அனுமதி பெற்று விழாவை இரவு நேரத்தில் நடத்துவதால் ஆத்திரம் அடைந்த போலீஸார், கோயில் நிர்வாகிகள்மீது மட்டும் அல்லாமல் கரகாட்டக் கோஷ்டியினர், பாட்டுக் கச்சேரியில் பாடியவர்கள், இசைக்கருவிகளை இசைத்தவர்கள் எனப் பலர் மீதும் வழக்குகளைப் பதிவுசெய்தனர். இசைக் கச்சேரியில் பாடிய 8 வயது சிறுமியான மோனிகா என்பவர் முதல் 75 வயது நிரம்பிய கோயில் நிர்வாகி மீது வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

அத்துடன் கோயில் நிர்வாகிகளுடன் சேர்த்து `மேலும் பலர்’ எனக் குறிப்பிடப்பட்டு தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவந்தது., அதனால் பணகுடியைச் சேர்ந்த யாரையும் இந்த வழக்குகளில் சேர்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைமை ஏற்பட்டது. இதையறிந்து அதிருப்தி அடைந்த பக்தர்கள் ஏற்கெனவே கோயிலுக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த விவகாரத்தில் தொகுதியின் எம்.எல்.ஏ-வான இன்பதுரை தலையிட்டு சுமுக தீர்வுக்கு வழிவகுத்தார். 

அந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை மீறித் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், 9-ம் நாள் திருவிழாவான இன்று தேர் பவனியில் பங்கேற்காத பக்தர்கள், தேரின் முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!