சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள்..! சேலம் ஆட்சியரிடம் புகார்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாதிப் பெயரை சொல்லித் திட்டுவதாக ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியர் ரோஹினியிடம் புகார் அளித்தனர். 

இதுபற்றி ஊர்க்காரர் அண்ணாதுரை பேசும்போது, ''நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். சேலம் கோரிக்காடு அடுத்த பள்ளிப்பட்டி பகுதியில் 15  ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனைப்பட்டா கொடுத்தாங்க. அதையடுத்து, தற்போது இந்தப் பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியையொட்டி சில உயர்சாதி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகிறார்கள். 

எங்க குழந்தைகள் அவுங்க வீட்டுப்பக்கம் போனால் சாதிப் பெயரைச் சொல்லி திட்டுறாங்க. ஒரு காது குத்து, கல்யாணத்துக்கு ரேடியோ வச்சா ஏசுறாங்க. சாதிப் பெயரைச் சொல்லி பாட்டு கேக்குதா என்கிறார்கள். நாங்க இந்தப் பகுதிக்கு குடி வந்ததில் இருந்து ஒரு கோயில் கட்டி பண்டிகை கொண்டாடலாம் என்றால் விட மாட்டங்கறாங்க. 

கோயிலில் பூஜை செய்யக் கூடாது, ரேடியோ கட்டக் கூடாதுன்னு, வாய்க்கு வந்த மாதிரி அசிங்க அசிங்கமாக பேசுறாங்க. எங்க கோயிலில் மின்சாரம் இல்லாததால் பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் கொடுத்தோம். மின்வாரியத்தில் சொல்லி பிடிங்கிட்டு போயிட்டாங்க. இப்படி எதுவும் எங்களால் செய்ய முடியவில்லை. எங்க போய் சொன்னாலும் அவுங்க பக்கம்தான் பேசுறாங்க. அதனால் ஊரே கிளம்பி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துவிட்டோம்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!