8 இல்ல 11 பெண்கள்! எகிறும் புருஷோத்தமனின் கல்யாண லிஸ்ட்.

இரண்டாம் திருமணம் என்று பொய் சொல்லி 8 பெண்களை ஏமாற்றியதாக கூறப்பட்ட  ‘கல்யாண மன்னன்’ புருஷோத்தமனைக் கடந்த சில நாள்களாக தனிப்படை அமைத்து தேடி வந்தது கோவை போலீஸ். இந்நிலையில் நேற்று, ‘புருஷோத்தமன் கைதுசெய்யப்பட்டார்’ என்ற தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், காவல்துறையினரோ புருஷோத்தமன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் இன்னும் சில நாள்களில் பிடித்துவிடுவோம் என்றும் சாதித்தார்கள். புருஷோத்தமன் கைதுசெய்யப்பட்டாரா இல்லையா என்ற தகவல் ஊர்ஜிதம் ஆவதற்குள் வெளியாகியிருக்கும் இன்னொரு தகவல் இந்த வழக்கின் உஷ்ணத்தை மேலும் கூட்டியிருக்கிறது.

கல்யாண மன்னன் புருஷோத்தமன்

கோவை வெள்ளளூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்தவரான 57 வயதான இவருக்கு 21 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். கோவை காந்திபுரத்தில் உள்ள  ‘மெட்டி ஒலி திருமணத் தகவல் மையத்தின்’ உரிமையாளர்களான வனஜாகுமாரி, மோகன் ஆகியோரின் உதவியோடும் தன் மகளின் உறுதுணையோடும் புருஷோத்தமன் நடத்திய திருமண வேட்டை  சமீபத்தில் அம்பலமானது. இரண்டாம் திருமணத்துக்கு மணமகன் தேடும் பணக்கார விதவைப் பெண்ணின் தொடர்பு எண்ணை மெட்டி ஒலி திருமணத்தகவல் மையத்தின் மூலம்  பெற்று, அந்த பெண்ணிடம் நல்லவரைப் போல நயமாகப் பேசிப்பழகி திருமணம் செய்துகொள்வது. ஒரு மாதத்துக்கு அந்தப் பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது, அடுத்த சிலநாள்களில் ஏதாவதொரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு அந்த பெண்ணிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டிவிடுவது இப்படி மொத்தம் 8 பெண்களை ஏமாற்றியுள்ளதாக புருஷோத்தமனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சமீபத்தில் கொடுத்த புகாரின் மூலம் தெரியவந்தது. ஒட்டுமொத்த கோயம்புத்தூரும் புருஷோத்தமனின் திருமண மோசடியைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். பாதிக்கப்பட்ட இன்னும் சில பெண்கள் புகார் கொடுக்க, தனிப்படை அமைத்து புருஷோத்தமனை தீவிரமாகத் தேடி வந்தது கோவை போலீஸ்.

இந்நிலையில்தான் நேற்று புருஷோத்தமன் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி பரபப்பானது. ஆனால், ஊடகங்களிடம் கைது இல்லை என்று  திட்டவட்டமாக போலீஸ் மறுத்துவருகிறது. புருஷோத்தமனை கடந்த சிலதினங்களுக்கு முன்பே கைது செய்துவிட்டதாகவும். உடனடியாக அதைக் காண்பித்தால் புருஷோத்தமன் வாயிலிருந்து உண்மையைப் பிடுங்க முடியாமல் போய்விடும். பெயிலில் வந்துவிடுவார் என்பதால்தான் சீக்ரெட்டாக வைத்திருக்கிறோம். புருஷோத்தமன் வாயைத் திறக்காமல் அடம்பிடித்துவருகிறார். அவருடைய சொத்துப்பட்டியல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவைகளை திரட்டிவிட்டோம். விரைவில் உண்மை வெளிவரும் என்று சொல்கிறார்கள் சில காவல்துறை நண்பர்கள். இதுதொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் கேட்டதற்கு, ``மூன்று ஸ்பெஷல் டீம்கள் இரவு பகலாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். விரைவில் புருஷோத்தமன் கைதுசெய்யப்படுவார் என்றவர். கடைசியாக இன்னொரு தகவலைச் சொன்னார். புருஷோத்தமன் 8 பெண்களை ஏமாற்றியதாகத்தான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் 11 பெண்களை ஏமாற்றியிருக்கிறார். இன்னும் பலர் புகார் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!