வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (30/01/2018)

கடைசி தொடர்பு:10:39 (30/01/2018)

`கழிப்பறை கட்ட மூவாயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் நூறு நாள் வேலை! - குமுறும் கிராம மக்கள்

இளையான்குடி அருகே குடிக்க தண்ணி, தெருவிளக்கு இல்லாமல் ஒரு கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கின்றனர் சாத்தமங்களம் கிராம மக்கள். அந்த கிராமத்தில் இருந்து வந்திருந்த ராமலெட்சுமி பேசும்போது…

``சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்களம் அருகிலுள்ள கிராமம் சாத்தமங்களம். நூறு வீடுகள் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. தரம் இல்லாமல் கழிப்பறை கட்டிக்கொடுக்கிறார்கள். கழிப்பறை கட்டுவதற்கு அரசு தரும் தொகை ரூ.12,000. இதில் மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டி இருக்கிறது. நாங்களே கூடுதலாக பணம் போட்டு கழிப்பறையைத் தரமாக கட்டிக்கொள்கிறோம் என்று கேட்டால், அந்தப் பணத்தை எங்களிடம் கொடுக்காமல் அதிகாரிகள் ஆதாயம் அடைவதற்காக யாரோ ஒருத்தரிடம் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார்கள்.

கழிப்பறைக்குள் போய் வரமுடியாது. அந்த மாதிரிதான் கட்டப்படுகிறது. வயதானவர்கள் அந்தச் சுவரைப் பிடித்து எழுந்தாலே இடிந்து விழும் அளவுக்கு இருக்கிறது. இந்தக் கழிப்பறை கட்டவில்லையென்றால் நூறு நாள் வேலை இல்லை என்று மிரட்டுகிறார்கள். குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை. 4 கிலோமீட்டர் தூரம் தாயமங்களம் முத்துமாரியம்மன் கோயிலுக்குப் போய் தண்ணீர் எடுத்துவருகிறோம். கண்மாயில் நீர் இல்லை. குடிக்க, சமையல் செய்ய ஒரு குடம், இரண்டு குடம் தண்ணி எடுத்துட்டு வர்றோம்.

பள்ளிக்கூடம் போற பிள்ளைகள் வாரத்துல ஒரு நாள்தான் குளிக்க வைக்க முடியுது. கடந்த ஏழு மாசமாக தெரு விளக்கும் எரியல. தண்ணி வராமல் இருக்கிறதுக்கு கலெக்டர்கிட்ட மனு கொடுக்கணும்னு சொல்லி எங்க பஞ்சாயத்து கிளார்க் கையெழுத்து வாங்குனாரு. நாங்க படிக்காததுனால பொய் சொல்லி எங்கிட்ட அந்த மனுவில் கையெழுத்து வாங்கி, 'தண்ணிர் வசதி இருக்கு வேணாம்னு' எழுதியிருக்கிறார் அந்த மனுவில். எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கச் சொல்லி கடந்த ஆறுமாதமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகிறோம்'' என்கிறார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க