ரோட்டில் தவழ்ந்து கலெக்டர் ஆபீஸுக்கு வந்தேன்! - 3 சக்கர வண்டிக்காக அலைக்கழிக்கப்படும் மாற்றுத் திறனாளி

ஆயிரம் கோடி செலவு செய்து விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் இந்தியா தன் மாற்று திறனாளி  குடிமக்களுக்கு இன்னும் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துகொடுக்கவில்லை என்பது வேதனையான விஷயம். உச்சி வெயிலில் போக்குவரத்து நெரிசலில் இரண்டு கால்களும் செயலிழந்த ஒரு தாய் டிராஃபிக் சிக்னலுக்கு இடையில் ரோட்டை கைகளால் தவழ்ந்து கிராஸ் செய்த காட்சி பார்வையாளர்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

இதுபற்றி  மலர்கொடியிடம் பேசியபோது, ``என்னுடைய சொந்த ஊர் கருப்பூர் வெள்ளாளப்பட்டி. எனக்கு பிறவியிலேயே  இரண்டு கால்களும் ஊனம். என்னால் நடக்க முடியாது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தவழ்ந்துதான் போவேன். என்னை சுந்தரராஜ் என்பவர் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு சுரேஷ் என்ற ஒரு பையன் பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு வருடத்திலேயே என் கணவர் இன்னொரு திருமணம் செய்துகொண்டு என் குழந்தையைத் தூக்கிட்டு மும்பை போயிட்டார்.

இதுவர என் குழந்தையைப் பார்த்ததில்ல. தற்போது எனக்கு வயசு 45 தாண்டிவிட்டது. என்னுடைய தம்பியின் அரவணைப்பில் இருந்துவருகிறேன். அவனுக்கும் கை, கால்கள் செயல் இழந்ததால் தண்ணீர் எடுக்கக்கூட ஆள் இல்லை. நான் சின்னக் குடத்தில் தவழ்ந்து தவழ்ந்து எடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்.  ஊனமுற்றோருக்கான 3 சக்கர வண்டி கேட்டு பல ஆண்டுகளாக சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறேன்.

என்னை இங்கு கூட்டி வருவதற்குக் கூட ஆள் இல்லை. வீட்டில் இருந்து தவழ்ந்து வந்து எங்க ஊர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறி சேலம் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ரோட்டில் தவழ்ந்து கலெக்டர் ஆபீஸூக்கு வந்தேன். சேலத்தில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், ரோட்டில் தவழ்ந்து வர முடியவில்லை. எனக்கு 3 சக்கர வண்டி கொடுத்தால் கோடி புண்ணியமாக இருக்கும்'' என்றார் கண்ணீருடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!