வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (30/01/2018)

கடைசி தொடர்பு:12:30 (30/01/2018)

`எனக்குள்ள உணர்த்துச்சு'- 2 இளம் பெண்களின் உயிரைக்காப்பாற்றிய லாரி டிரைவர் நெகிழ்ச்சி

கடந்த வாரம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் விரைந்து வந்த லாரியை கவனிக்காமல், ஸ்கூட்டியில் நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் திடீரென வண்டியை வேகமாய் எடுத்து, அந்த லாரியில் மோதி, கீழே விழுந்து, பின்சக்கரத்தில் மாட்டிக் கொள்ள இருந்தார்கள். லாரி ஓட்டுநர் அதிரடியாக செயல்பட்டு லாரியை நிறுத்தி, அந்த இரு பெண்களின் உயிரையும் காப்பாற்றியது நினைவிருக்கலாம். அதுதொடர்பான வீடியோவை நமது இணையத்தில் வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் சமயோசிதமாக செயல்பட்ட அந்த முகம் அறியாத லாரி ஓட்டுநரைப் பாராட்டி இருந்தார்கள். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்றெல்லாம் கேட்டு, அவரைப் பற்றி அறிந்துகொள்ள பெரிதும் ஆர்வம் காட்டினார்கள். இப்போது அவரைப்பற்றி விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.


திருத்துறைப்பூண்டியில் வசிக்கும் பாஸ்கரன்தான் அவர். தன்னைப்பற்றிய அந்த வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கும் விஷயமே தெரியாமல் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருந்த பாஸ்கரனைத் தொடர்புகொண்டு பேசினோம். "முப்பத்தைந்து வருடங்களாக லாரி ஓட்டிகிட்டு இருக்கேன். இந்தியா முழுக்க லாரியிலேயே போய் வந்திருக்கேன். அன்னிக்கு ரெகுலர் சர்வீஸ் சரக்குகளை இறக்கிட்டு  திருத்துறைப்பூண்டிக்குத் திரும்பிகிட்டு இருந்தேன். புதுக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் எதிரே வந்தபோது, லெஃப்ட் சைடுல டம்முனு சத்தம் கேட்டுச்சு. மிர்ரர்ல பார்த்தாக்கா, ரெண்டு பொண்ணுங்க வண்டியோட லாரி சக்கரத்துக்குப் பக்கத்துல விழுந்துக் கிடக்குறாங்க. லாரி மூவ் ஆனா, பின் டயர்கள் அந்தப் பொண்ணுங்கத் தலையில் ஏறிடும்கிற அனுபவ அறிவு எனக்குள்ள உணர்த்துச்சு. உடனே, பிரேக் போட்டு நிறுத்தினேன்.

 

....................................

ரோட்ல இருந்தவங்க அந்தப் பொண்ணுங்களையும் வண்டியையும் மீட்டாங்க. இதையெல்லாம் மிர்ரர்ல பார்த்துட்டு, நான் வண்டியை எடுத்துட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்தச் சம்பவம் வீடியோவாக  நெட்ல வந்திருக்கு. இதெல்லாம் எனக்குத் தெரியாது. 'நான் உண்டு ..என் வேலை உண்டு'னு இருந்துட்டேன். அந்த வீடியோவை என்னோட முதலாளியும் பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டாரு. வீடியோவை அவரோட பெரிய போன்ல காட்டினாரு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. முதலாளியும் பாராட்டினாரு. அந்த லாரி பக்கத்துல நின்னு போட்டோவெல்லாம் எடுத்தோம். அந்த ரெண்டு பொண்ணுங்க உயிரை நான் காப்பாத்திட்டதா எல்லோரும் பாராட்டுனாங்க. அந்தவகையில எனக்கு மனநிறைவுங்க" என்றார் பாஸ்கரன்.