ஆட்டம் பாட்டம் மேளதாளத்துடன் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை எடுத்து வந்த எம்எ.ல்.ஏ ! - நெகிழவைத்த கிராம மக்கள்

கிராம மக்களும் சட்டமன்ற உறுப்பினரும் சேர்ந்து மேள தாளங்களுடன் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு வந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குன்னம் எம்.எல்.ஏ பேசியது மாணவர்களை மட்டுமல்லாமல் பொது மக்களின் மனதையும் உருக வைத்துவிட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கொத்தவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இளவழகன் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தனியார் பள்ளிகளோடு போட்டிப்போடும் அளவுக்கு அரசுப் பள்ளியை தரம் உயர்த்தியிருக்கிறார். இவர் அந்தப் பள்ளிக்கு வந்த பிறகு, கிராமத்தில் எத்தனை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் எடுத்துக்கொண்டு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி பள்ளி வயதுகொண்ட 152 பேர்களில் 140 பேரைத் தனியார் பள்ளியில் சேர்க்காமல் அரசுப் பள்ளியில் சேர்க்க வைத்தார்.

அதுமட்டுமல்லமல் ஆசிரியர் இளவழகன் அவருடைய சொந்த பணத்தில் 2 லட்சம் ரூபாய் செலவழித்து கம்ப்யூட்டர் வாங்கி ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை அமைத்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகிறார். அதே போல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் ஒத்துழைப்போடு பள்ளியிலேயே இயற்கைமுறையில் காய்கறிகள், கீரைகளை, விளைவிக்கப்பட்டு அதை மதிய உணவுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பள்ளியில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. ஆசிரியர் இளங்கோவன், அதிமுக எம்.எல்.ஏ ராமசந்திரனிடம் தகவலை சொல்லிய பிறகு அவருடைய நிதியிலிருந்து 2.50 லட்சமும் பொதுமக்களிடம் சொல்லிய பிறகு, அவர்கள் தரப்பில் 1.50 லட்ச ரூபாயும் திரட்டி பள்ளிக்குத் தேவையான 4 பீரோ, 4 டேபிள்கள், 3 கம்ப்யூட்டர் டேபிள்கள், 3 லைப்லரி ரேக்கர்கள், சேர்கள், குடம், தண்ணீர் கேன்கள் எனப் பள்ளிக்குத் தேவையான 2 லட்ச மதிப்புள்ள பொருள்களை சீர்வரிசை பொருள்களாகக் கொண்டுவந்தனர்.

அவற்றைப் பேருந்து நிலையத்திலிருந்து மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்தோடு ஊர்வலமாகப் பள்ளிக்குக் கொண்டு வந்தனர். பாரம்பர்ய முறைப்படி பொருள்களைப் பள்ளிக்குச் சீராக வழங்கினார்கள். இந்த நிகழ்வில் குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, பள்ளித் தலைமை ஆசிரியர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்பு, பள்ளி மாணவர்களிடம் பேசிய குன்னம் எம்.எல்.ஏ ராமசந்திரன், ``வகுப்பறைக்கு ஏசி வசதி, இன்ட்ராக்டிவ் சென்ஸ்டிவ் போர்டு என பலவசதிகள் செய்து கொடுத்திருக்கிறேன். நாங்கள் படிக்கும் காலகட்டத்தில் இவை போன்ற வசதிகள் இல்லை. ஆனால், உங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இவற்றை மாணவர்களாகிய நீங்கள் முழுமை பெற்று பயனடைய வேண்டும். ஒரு மாணவன் நல்ல வழியில் செல்வதை தீர்மானிப்பது அவனது கல்விதான். நீங்கள் அனைவரும் நல்லவழியில் செல்ல வேண்டும். எப்போதுமே நாம ஜெயிக்கணும் இல்லை; ஜெயிக்கிறவங்களோடு கூட இருக்கணும். நீங்க ஜெயிக்கறவங்களா, இல்லை ஜெயிக்கிறவங்க கூட இருப்பவங்களா என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்'' என்று மாணவர்களுக்கு உணர்வூட்டும் விதத்தில் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!