நகைக்கடை டு பெரியபாண்டியன் வரை... கொள்ளையன் நாதுராமுக்கு 10 நாள் போலீஸ் காவல்!

கொளத்தூர் நகைக்கடை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராம் உள்ளிட்ட 3 பேரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.


சென்னைக் கொளத்தூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சௌத்ரி, பக்தாராம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் நாதுராமைப் பிடிப்பதற்காகச் சென்னை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார். பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு, அவருடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக்குண்டு என்பதால், விசாரணையை ராஜஸ்தான் போலீஸார் தீவிரப்படுத்தினர். 

தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராம், குஜராத்தில் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரான் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில், ராஜஸ்தான் விரைந்த தமிழகப் போலீஸார், டிரான்ஸிட் வாரன்ட் மூலமாக நாதுராம் உள்ளிட்டோரை விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சென்னைப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நாதுராம், தினேஷ் சௌத்ரி மற்றும் பக்தாராம் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கொளத்தூர் ராஜமங்கலம் போலீஸார் எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று (30.1.2018) விசாரணைக்கு வந்த நிலையில், நாதுராம், தினேஷ் சௌத்ரி மற்றும் பக்தாராம் உள்ளிட்டோர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், போலீஸாரின் கோரிக்கையை ஏற்று நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த நாதுராமின் தந்தை சென்னாராம் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நாதுராம், பக்தாராம் மற்றும் தினேஷ் சௌத்ரி ஆகியோரும் அல்லிகுளம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!