`உன் மனைவிக்கு ஏன் செயின் வாங்கிக்கொடுக்கல' - நள்ளிரவில் கணவரைக் கலங்கடித்த முகமூடிக் கொள்ளையர்கள்

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கணபதியாபுரத்தில் நாராயணசாமி (80) என்பவர் தன் மனைவி செளந்தர்யா (80) உடன் வசித்துவருகிறார். இத் தம்பதிக்கு 4 மகன்களும் 2 பெண்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து பல்வேறு இடங்களில் வசித்துவருகின்றனர். இந்நிலையில் நாராயணன் தன் மனைவியுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்போது இரவு சுமார் 2 மணிக்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் வந்து செளந்தர்யாவிடம் இருந்த வளையல், மோதிரம், கம்மல் உள்ளிட்டவற்றைப் பறித்தனர்.  அப்போது, 'கழுத்தில் ஏன் செயின் போடவில்லை' என்று செளந்தர்யாவைக் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். 'இல்லை' எனக் கூறியதால், 'ஏன் மனைவிக்கு செயின் வாங்கிக்கொடுக்க மாட்டாயா' எனக் கூறி நாராயணன் முகத்தில் கத்தியை வைத்து கீறி உள்ளார் .

அதைத் தொடர்ந்து கணவனையும் மனைவியையும் கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகையை எடுத்துக்கொண்டு மொத்த 9 பவுன் நகையுடன் திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து, மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

''மேலூர் பகுதியில் தற்போது தொடர்ந்து நடந்துவரும் கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவருகிறது. காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்துவருவதாகத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ-யின் உறவினருடைய திருடு போன நகைகளை மட்டும் 3 நாளில் மேலூர் காவல்துறைக் கண்டறிந்து கொடுத்துள்ளது. ஆனால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு காவல்துறை சீறிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்பதுதான் எங்களுக்கு ஆதங்கமாக உள்ளது'' என மேலூர் பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!