வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (30/01/2018)

கடைசி தொடர்பு:17:45 (30/01/2018)

`மன்னா, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுக்காதீங்க' - அனைவரையும் கவர்ந்த குழந்தைகளின் நாடகம்

மன்னா, மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அனுமதியளிக்கபட்டு அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் பசுமையான நம் பூமி பாலைவனமாக மாறிவிடும்" எனக் குழந்தைகள் நடத்திய நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

தஞ்சாவூர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் கொண்டாடபட்ட ஆண்டு விழாவில் தேச தலைவர்களின் பட்டியலில் விவசாயிக்கும் இடம் கொடுத்து, விவசாயம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளின் நாடகம், பாட்டு என நடைபெற்றது. பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததோடு பெருமை கொள்ளவும் வைத்தது. தஞ்சாவூர் அருகே  அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டு விழா கொண்டாடபட்டது. பொதுவாகப் பள்ளிகளில் கொண்டாடப்படும் ஆண்டு விழா என்றாலே சினிமா பாட்டு, நடனம், நாடகம், கலை நிகழ்ச்சிகள் என மாணவ, மாணவிகளின் திறமையை வெளிபடுத்தும் விதமாகவே நடைபெறும். குழந்தைகள் தொடங்கி ஆசிரியர்கள், பெற்றோர்கள் வரை அனைவருக்கும் உற்சாகம் கரைபுரண்டோடும் அந்த நாளில். தங்கள் செல்லக் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு பெற்றோர்கள் வியந்து போகும் அளவிற்கு இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும்.

இதேபோல்தான் ஆரம்பமானது அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளியில் கொண்டாடபட்ட ஆண்டு விழாவும். பின்னர்  நிகழ்ச்சியில் விவசாயத்திற்கு முக்கித்துவம் கொடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகாகவி பாரதியார், காந்தி, நேரு, சுவாமி விவேகானந்தர் என தேசத் தலைவர்கள் வேடமிட்டு குழந்தைகள் மேடையேறினர். அதற்கு முத்தாய்ப்பு சேர்க்கும் விதமாக விவசாயி வேடமிட்ட குழந்தையும் தேசத் தலைவர்களோடு சேர்ந்து மேடையேறியதோடு தேசத் தலைவர்களாக விவசாயிகளும் மதிக்கப்பட வேண்டும் என்கிற பொருள் படும்படிதான் இந்த ஏற்பாடு என விளக்கமும் சொல்லப்பட்டது.

மன்னர் காலத்தில் நடைபெறும் அமைச்சரவை போல் ராஜா, மந்திரி, சேவகர்கள் போல் குழந்தைகள் வேடமிட்டுக் கொண்டு அமைச்சரவை நடப்பது நாடகம் நடத்தினர். அப்போது எல்லாத் துறைகளையும் சேர்ந்த மந்திரிகள் தங்கள் துறைகளைப் பற்றிப் பேசுவது போல் நடித்தனர். அப்போது விவசாயத்துறை மந்திரி மன்னா, "போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். விவசாயிகளையும் அவர்கள் நடவு செய்த பயிர்கள் தன்ணீர் இல்லாமல் கருகுவதையும் நாம் காக்க வேண்டும். அப்போதுதான் நம் மன்னரவை சிறக்கும். மேலும் விவசாயிகள் வாழ்வை சீர் குலைக்கும் வகையில் இங்கு உள்ள வளங்களைக் கெடுக்கும் வகையில் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அனுமதியளிக்கபட்டு அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. அதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் பசுமையான நம் பூமி பாலைவனமாக மாறிவிடும்" என நடந்து முடிந்தது அந்த நாடகம்.

மேலும் நடைபெற்ற ஒரு நடன நிகழ்ச்சியில், விவசாயிகள் இல்லையேல் என்றோ அழிந்திருக்கும் இந்த உலகம் பட்டினியால், அடுத்த தலைமுறைக்காவது குழந்தைகளுக்கு கிரிகெட்டுக்குப் பதிலாக விவசாயத்தை சொல்லிக்கொடுங்கள். ஏனெனில் ஸ்கோரைவிட சோறு முக்கியம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்தவாறு நடனம் ஆடினார்கள். இதைக் காண வந்த குழந்தைகளின் பெற்றோர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் பெருமையோடு பரவசமும் அடைந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க