முத்தையா ஸ்தபதி உறவினர்களிடம் விசாரணை! களத்தில் இறங்கினார் பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி தொடர்பாகத் தலைமறைவாக இருக்கும் தலைமை ஸ்தபதி முத்தையாவின் உறவினர்களிடம் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார். ``தலைமறைவாக இருக்கும் முத்தையா ஸ்தபதிக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்திருந்தாலோ அல்லது அடைக்கலம் கொடுக்க முன்வந்தாலோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த அதிரடியாகக் காஞ்சிபுரத்தில் உள்ள தலைமை ஸ்தபதி முத்தையாவின் நெருங்கிய உறவினர்களிடம் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார், காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இரண்டு மணிநேரத்துக்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொமாஸ் கந்தர் சிலை காஞ்சிபுரம், முத்தையா ஸ்தபதி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலையில் இந்து அறநிலையத்துறை குறிப்பிட்ட அளவு தங்கம் கலக்கவில்லை எனக் காஞ்சிபுரம் பகுதிக்ச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்துவரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையின் அடிப்படையில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், கோயில் ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில்,  கிருஷ்ணமூர்த்தி, சங்கரன், பரத்குமார், வினோத்குமார், சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் புதிய சோமாஸ் கந்தர் சிலையில் எள்ளளவும் தங்கம் இல்லை. அதுபோல் பழைய சோமாஸ் கந்தர் சிலையிலும் தங்கம் இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு முறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நேரடியாகக் காஞ்சிபுரம் வந்து விசாரணை நடத்தினார். வழக்குப்பதியப்பட்ட ஒன்பது பேரிடமும் விசாரணை நடத்தப்படும் எனப் பொன்மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கடந்த ஒருமாதமாக முத்தையா ஸ்தபதி தலைமறைவாக இருக்கிறார். ஜாமீன் வேண்டி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள நிலையில் அவரைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் சிலைதடுப்பு பிரிவினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் முத்தையா உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!