``போராடிய மாணவர்கள்மீது தடியடி நடத்துவதா?'' - காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் | Stalin condemns Police lathi charge on student protest against Bus fare hike

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (30/01/2018)

கடைசி தொடர்பு:19:10 (30/01/2018)

``போராடிய மாணவர்கள்மீது தடியடி நடத்துவதா?'' - காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம்

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்திய சம்பவத்துக்குத் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், மாணவர்கள் எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (30.1.2018) போராடினர். அந்தக் கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஓட்டேரி பேருந்து நிலையத்தின் அருகில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தநிலையில், மாணவர்கள் மீதான தடியடி சம்பவத்துக்குத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ‘‘பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி இருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். மாணவர்கள் மீதான அடக்குமுறையைக் கைவிட்டு, கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுவதோடு, மாணவர்கள் மீதான வழக்குகளை ‘குதிரை பேர’ அரசு ரத்து செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.