`அனைவருக்காகவும்தான் போராட்டம் நடத்துகிறோம்' - போலீஸ் தடியடியால் கொந்தளித்த மாணவி

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசுக் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேருந்துக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் தொடர்ந்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் எதிர்க்கட்சிகளும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் தரப்பு போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து பேருந்துக் கட்டணத்தை சிறிது குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்தநிலையில், பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் வேலூர் - திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், சுமார் 2 மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளைப் போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். போலீஸாரின் தடியடிக்கு கல்லூரி மாணவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபடும் எங்களுக்குப் பாதுகாப்புத் தருவதை விட்டுவிட்டு, எங்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். அனைவருக்காகவும்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். தமிழக அரசுப் பேருந்துக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்திவிட்டு, தற்போது வெறும் ஒரு ரூபாய் மட்டும் குறைத்துள்ளது கண்டனத்துக்குரியது’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!