விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி அன்னா ஹசாரே போராட்டம் நடத்த முடிவு!

அன்னா ஹசாரே

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் 23–ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த அன்னா ஹசாரே முடிவுசெய்துள்ளார். 

ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர் அன்னா ஹசாரே. காந்தியவாதியான இவர், ஊழலுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடத்தியவர். ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கண்காணிக்கவும் அவர்கள் ஊழல் செய்வதைத் தடுக்கவும் வலுவான லோக்பால் சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் மீண்டும் ஊழலுக்கு எதிரானப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்து இருக்கிறார். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ``விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் விவசாயத் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வருமானத்துக்கான வழிகளை அரசுகள் தெரிவிக்க வேண்டும்; உதவிகளைச் செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வலியுறுத்தி வருகிற மார்ச் மாதம் 23–ம் தேதி டெல்லியில் நான் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளேன். ‘ஸ்மார்ட்’ நகரங்களுக்குப் பதிலாக நாம் ‘ஸ்மார்ட்’ கிராமங்களை உருவாக்க வேண்டியது அவசியம். கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் நகரங்களும் முன்னேறும். நகரங்கள் வளர்ந்தால் நாடு முன்னேற்றம் அடையும்” என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!