பழநி முருகன் கோயிலில் காலையில் தைப்பூச விழா..!

பழநி முருகன் கோயிலில் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு தைப்பூசம் மாலையில் நடைபெறுகிறது. 

பழநி தைப்பூசம்

பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில் வழக்கமாக தைப்பூசத் தேரோட்டம் மாலையில் நடக்கும். ஆனால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, தைப்பூசம் அன்று சந்திரகிரகணம் வருகிறது. எனவே, இந்த ஆண்டுக்கான தைப்பூசத் தேரோட்டம் வழக்கத்துக்கு மாறாக காலையில் நடைபெறுகிறது. பழநியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 25-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. தைப்பூசத் திருநாளான புதன்கிழமை (31-ம் தேதி) மாலை 6.22 மணி முதல் இரவு 8.41 மணி வரை சந்திரகிரகணம் இருக்கிறது.

எனவே, அன்று மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் பிற்பகல் 2.45 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்று, மாலை 3.45 மணிக்கு அனைத்து சந்நிதிகளுக்கும் திருக்காப்பிடப்படும். (நடை சாத்தப்படும்) சந்திரகிரகணம் முடிவுற்ற பிறகு இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் புண்ணியாகவாசனம் (சம்ரோக்சன பூஜை) செய்து சந்நிதி நடைதிறக்கப்படும். தொடர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று சந்நிதி திருக்காப்பிடப்படும். 

சந்திரகிரகணத்தை முன்னிட்டு அன்று காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சுவாமியை திருத்தேர் ஏற்றம் செய்து, உடன் வடம் பிடித்தலும் நடைபெறும். அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் இருந்து நான்கு ரதவீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெறும். திருத்தேர் நிலைக்கு வந்தவுடன், தங்க பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நடைபெற்று பிறகு 3.45 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் சந்நிதி திருக்காப்பிடப்படும் என தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!