நமது இளைஞர்கள் சுய வலிமையை உணர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும்..! அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோரிக்கை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சுவாமி விவேகானந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் ஆகியவை இணைந்து நடத்திய `சுவாமி விவேகானந்தர் மற்றும் பாரம்பர்ய எழுச்சிகள் - 2018' என்றத் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கத்தின் தொடக்கவிழா இன்று (30-1-2018) பல்கலைக்கழக கருத்தரங்கத்தில் நடைபெற்றது. 

இந்தக் கருத்தரங்கினைத் தொடங்கிவைத்து தலைமையுரையாற்றிய அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா பேசும்போது, ``சுவாமி விவேகானந்தர் இந்திய நாட்டின் கலாசாரப் பெருமைகளை சரியான முறையில் மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர். இதற்குப் பிறகே மேற்கத்தியர்கள் இந்தியாவைப் பற்றிய தவறானப் புரிதல்களையும், கருத்துகளையும் மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் படைப்புகள் மூலமே இந்தியாவின் அறிவு செல்வங்களான யோகா  கலையும் ஆன்மிக அறிவும் மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

சுவாமி விவேகானந்தர் உடல் வலிமையையும் ஆன்மிகப் பற்றுதலையும் வளர்ப்பதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பை வளர்க்கமுடியும் என்று தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். இளைஞர்களைப் பற்றியே அதிகம் சிந்தித்தார். சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகித இளைஞர்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டு இளைஞர்களின் சுய வலிமையை உணர்ந்து, அதை நாட்டு முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டுமென சுவாமி விவேகானந்தர் கூறிய அறிவுரைகள் என்றுமே பயன்படக் கூடியவை' என்று அவர் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!