வெளியிடப்பட்ட நேரம்: 06:31 (31/01/2018)

கடைசி தொடர்பு:06:54 (31/01/2018)

ஒரு கையால் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து..! பதறிய பயணிகள்

சேலத்திலிருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்தை, பேருந்து ஒட்டுநர் ஒரு கையால் மட்டுமே ஒட்டிவந்துள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்திலிருந்து நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்தப் பேருந்து ஒட்டுநரின் வலது கையில் பெரிய அளவில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. அதனால், அவர் ஒரு கையிலேயே பேருந்தை இயக்கியுள்ளார். அதனால், அச்சமடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்திலிருந்த பயணி ஒருவர், நமது போட்டோகிராபரைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, அந்தப் பேருந்து விழுப்புரம் பேருந்து நிலையம் வந்தபோது, நமது போட்டோகிராபர் அந்த ஒட்டுநரை படம் எடுத்துள்ளார். இதுகுறித்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தகவல் ஏதும் கொடுக்க மறுத்துவிட்டார். அந்தப் பேருந்து ஓட்டுநர் காயம் காரணமாக ஒரு மாதம்வரை ஓய்வில் இருந்துள்ளார். மேலும், அவருக்கு விடுமுறை அளிக்கப்படாததால், அவர் பணிக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இருப்பினும், நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்தைக் காயமடைந்த ஓட்டுநரை பணி செய்ய பணித்தது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.