வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (31/01/2018)

கடைசி தொடர்பு:08:20 (31/01/2018)

குற்றவாளிகள் மீது அடுத்தடுத்து பாயும் குண்டர் சட்டம்!

வெவ்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட கைதிகள் இருவர் மீது அடுத்தடுத்து குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி மாலை திருச்சி உறையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்த மணி மகன் மோகன் என்பவர் தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்து வந்தபோது திருச்சி உறையூர் புது வாலாஜா தெருவைச் சேர்ந்த பொன்னம்பலம் மகன் மோகன்ராஜ் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணம் ரூ.7,000/-ஐ பறித்துச் சென்றது தொடர்பாக கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் மோகன் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவுசெய்து கன்டோன்மென்ட் போலீஸார், மோகன்ராஜை கைதுசெய்தனர்.

குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கடந்த 7-ம் தேதி முதல் சிறையில் இருக்கும் மோகன் ராஜ் மீது, கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகளும், தில்லைநகர் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும், உறையூர் காவல் நிலையத்தில் 2 வழிபறி வழக்குகளும் நிலுவையில் உள்ளதால், தொடர்ந்து மோகன்ராஜ் வெளியில் இருந்தால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவார் என்கிற காரணத்தால், திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார், கொடுத்த அறிக்கையின் படி திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மேற்படி மோகன்ராஜ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.

அதன்படி திருச்சி மத்தியச் சிறையில் இருந்து வரும் மேற்படி குற்றவாளி மோகன்ராஜிடம், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணை வழங்கப்பட்டது.

இதேபோல், நேற்று, திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் அருகே கடந்த டிசம்பர் 12-ம் தேதி காலை திருச்சி எடத்தெரு, பிள்ளை மாநகர் ரட்சகராஜ் மகன் மரியராஜ் இதேபோல் தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்து வந்தபோது திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, செல்லியம்பாளையம், காங்கயம்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த நடராஜ் மகன் செல்வகுமார் (எ) மதன், கத்தியைக் காட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணம் ரூ 500/-ஐ பறித்துச் சென்றது தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் மரியராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ராமலிங்கம் விசாரணை செய்து, செல்வகுமார் (எ) மதனை கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் மதன் மீது, காந்தி மார்க்கெட் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலையங்களில்; தலா ஒரு திருட்டு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாலும், மேலும், திருப்பூர், தாராபுரம், ஊத்துக்குளி, கரூர் மாவட்டம் வாங்கல், தூத்துக்குடி மாசர்பட்டி உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

மேற்படி மதன் வெளியில் இருந்தால், தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்பதால், காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் ராமலிங்கம், கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மேற்படி செல்வகுமார் (எ) மதனை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார். அதன் பேரில் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க ஆணையிட்டார்..

அடுத்தடுத்து குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்வதால் திருச்சியில் கிரிமினல்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க