'நானும் ஆன்மிகவாதிதான்.. ஆனால் பாபா சிம்பல் காட்டமாட்டேன்' - ரஜினிக்கு ட்விஸ்ட் வைத்த சரத்குமார்!

சரத்குமார், sarathkumar

அரசுப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய சரத்குமார், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும், மாநில அரசின் நிலையைக் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசுகையில், “உலகளவில் சிறப்பாக போக்குவரத்து சேவை அளித்துவரும் முதல் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. தினமும் 2 கோடி மக்கள் பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றனர். இவர்கள் கொடுக்கும் பணம் எங்கே போகிறது. முதலில் இதற்கு இருப்பு நிலை மதிப்பாய்வை உடனடியாக செய்ய வேண்டும். நம்முடைய நிதி நிலை என்ன என்பதைப் பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது, எதனால் போக்குவரத்துத் துறை நஷ்டம் அடைகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ளட்டும். இதற்கு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும். ஆனால், இவர்கள் கூட்ட மாட்டார்கள். ஏனெனில், இவர்களுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்காது. எல்லாவற்றுக்கும் சென்ற அரசு செய்த பிரச்னையை நாங்கள் தீர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அண்மையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் ஓய்வூதியத் தொகையை வழங்கவில்லை என்று கூறினார்கள். செந்தில் பாலாஜி யார், அவர் என்ன தி.மு.க ஆட்சியிலேயா அமைச்சராக இருந்தார். அவரும் இவர்களுடைய ஆட்சியில்தான் இருந்தார். இப்போது இவர்களோடு இல்லை. இதுபோன்ற பேச்சுகள் எடுபடாது. நாம் எதிர்கால சந்ததியினருக்கு துரோகம் செய்துவிட்டோம் என்பதை உணருங்கள் முதலில்”, என்று குற்றம் சாட்டினார். 

sarathkumar, சரத்குமார்

ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி கூறியபோது, “நானும் ஆன்மிகவாதிதான். ஆனால், இப்படிக் காட்ட மாட்டேன் (பாபா குறியை காண்பிக்கிறார்). இது ஆட்டின் தலையைக் குறிக்கிறது. இதை ஏற்கெனவே சீமான் விவரமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். இது ’சீக்ரேட் சொஸைட்டியின் சிம்பல், நாட் பாபா சிம்பல்’. நான் அரசியல் தெரியாதவனல்ல. 1996-ம் ஆண்டு புரட்சித் தலைவியை எதிர்த்து போராடியவன் நான். 'தமிழகத்தை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது', என்று சொல்லிவிட்டு அமெரிக்காவில் போய் உட்கார்ந்திருந்தவர் ’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த். அந்த ஆட்சி வந்திருந்தால் உங்களை ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயந்து ஓடிவிட்டீர்கள். அப்போது, அ.தி.மு.க ஆட்சி முடிந்து கலைஞர் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் திரும்பி வந்தீர்கள். சந்தர்ப்பத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்”, என்று சாடினார்.

நடிகர் கமல்ஹாசன் ’20 வருடங்களாக நானும் இதே அரசியலில்தான் இருந்து வருகிறேன்’ என்று கூறியதைப் பற்றி கேட்டபோது, ‘ஓட்டு போடும் உரிமை பெற்ற அனைவருமே அரசியலில்தான் இருக்கிறார்கள்’ என்று எள்ளி நகைத்தார். "பேருந்துக் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி சொற்ப விகிதத்தில் குறைத்திருப்பதைக் கைவிட்டு, கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் அதுவரை எங்களது போராட்டம் தொடரும்" என்று சரத்குமார் தெரிவித்தார். முன்னதாக, கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு கலந்துகொள்ள வந்த சரத்குமார் சைக்கிளில் பயணம்செய்து பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!