வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (31/01/2018)

கடைசி தொடர்பு:12:07 (31/01/2018)

ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வை தாக்கிய இளைஞர் 10 நாள்களுக்குப் பின் திடீர் மரணம்!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை அடித்த வசந்தாமணி என்ற இளைஞர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்


கடந்த ஜனவரி 21-ம் தேதி கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். திருமண மண்டபத்தின் முன்பு இளைஞர் ஒருவர் பன்னீர்செல்வத்திடம் ஆசீர்வாதம் வாங்குவதுபோல் காலில் விழுந்தார். பின்னர் அவரின் கால்களை வாரி கீழே தள்ளினார். பன்னீர்செல்வம் தடுமாறி தரையில் விழுந்தார். அந்த இளைஞர் அதோடு விடாமல் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் முகத்தில் குத்தினார்.

இதைக் கண்ட எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் இளைஞரை சரமாரியாக தாக்கினர். இதனால் காயமடைந்த இளைஞர், போளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். 

இதையடுத்து எம்.எல்.ஏவை தாக்கிய அந்த இளைஞர் போளூரைச் சேர்ந்த வசந்தாமணி என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாள்கள் முன்னர் கலசப்பாக்கத்தில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பிரமாண்ட மேடை அமைத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கான விழா மேடையைப் போளூரைச் சேர்ந்த வசந்தாமணிதான் அமைத்துக் கொடுத்துள்ளார். மேடை அமைத்ததுக்கான பணத்தை எம்.எல்.ஏ-விடம் வசந்தாமணி கேட்டதாகவும், தர முடியாது என மிரட்டும் தொனியில் எம்.எல்.ஏ பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. பலதடவை, 'மேடை அமைத்ததுக்கான பணத்தைக் கொடுத்துவிடுங்கள்' என வசந்தாமணி கேட்டும் எம்.எல்.ஏ கொடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தாமணி எம்.எல்.ஏ-வை தாக்கியதாகக் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் வசந்தாமணியைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். சிறையில் இருந்த வசந்தாமணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

வசந்தாமணிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த வசந்தாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க