வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (31/01/2018)

கடைசி தொடர்பு:10:44 (31/01/2018)

பள்ளிக்கூடத்தில் மர்ம நபர்களால் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு மாணவனின் வாயில் ஊசியைப் போட்டு விழுங்க வைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுகுமார் நகரைச் சேர்ந்தவர் ராஜூ. இவரின் மகனான வருண் என்ற சிறுவன், திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், மாணவர் வருண், சிறுநீர் கழிப்பதற்காக பள்ளியில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது, அங்கே முகத்தை துணியால் மறைத்தவாறு, அடையாளம் தெரியாத 4 பேர்,  மாணவர் வருணை தாக்கி, அவரது கையை மடக்கிப் பிடித்து, வாயில் ஊசியைப் போட்டு விழுங்கச் செய்துவிட்டு, தப்பியோடி உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் வருண், சம்பவம்குறித்து வீட்டில் உள்ள பெற்றோர்களிடத்தில் தெரிவித்திருக்கிறார். பதறிப்போன பெற்றோர்கள், உடனடியாக வருணை அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, வருணின் வயிற்றில் ஊசி இருந்தது உறுதியாகி இருக்கிறது. இதனால் கோபமடைந்த பெற்றோர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்று, பள்ளியில் நடந்த சம்பவம்குறித்து புகார் அளித்திருக்கிறார்கள். இதையடுத்து மாணவன் வருணை கட்டாயப்படுத்தி ஊசியை விழுங்க வைத்ததாக கருதப்படும் அந்த 4 பேர் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது காவல்துறை.