வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (31/01/2018)

கடைசி தொடர்பு:12:09 (31/01/2018)

`வசந்தமணியை நானா கொன்றேன்?’ - பதறும் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை அடித்த வசந்தமணி என்ற இளைஞர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் வசந்தமணியைக் கொடூரமாகத் தாக்கியதால்தான் அவர் தலையில் காயம் ஏற்பட்டு இறந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. 

பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்


கடந்த ஜனவரி 21-ம் தேதி கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். திருமண மண்டபத்தின் முன்பு இளைஞர் ஒருவர் பன்னீர்செல்வத்திடம் ஆசீர்வாதம் வாங்குவதுபோல் காலில் விழுந்தார். பின்னர், அவரின் கால்களை வாரி கீழே தள்ளினார். பன்னீர்செல்வம் தடுமாறி தரையில் விழுந்தார். அந்த இளைஞர் அதோடு விடாமல் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் முகத்தில் குத்தினார்.

இதைக் கண்ட எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் இளைஞரைச் சரமாரியாகத் தாக்கினர். இதனால் காயமடைந்த இளைஞர், போளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர், வீடு திரும்பினார். 

வசந்தமணி
 

இதையடுத்து, எம்.எல்.ஏ-வை தாக்கிய அந்த இளைஞர் போளூரைச் சேர்ந்த வசந்தமணி என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாள்கள் முன்னர், கலசப்பாக்கத்தில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பிரமாண்ட மேடை அமைத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கான விழா மேடையைப் போளூரைச் சேர்ந்த வசந்தமணிதான் அமைத்துக் கொடுத்துள்ளார். மேடை அமைத்ததுக்கான பணத்தை எம்.எல்.ஏ-விடம் வசந்தமணி கேட்டதாகவும், தர முடியாது என மிரட்டும் தொனியில் எம்.எல்.ஏ பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. பலதடவை, 'மேடை அமைத்ததுக்கான பணத்தைக் கொடுத்துவிடுங்கள்' என வசந்தமணி கேட்டும் எம்.எல்.ஏ கொடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தமணி எம்.எல்.ஏ-வை தாக்கியதாகக் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் வசந்தமணியைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். வேலூர் சிறையில் இருந்த வசந்தமணிக்கு நேற்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

வசந்தமணிக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த வசந்தமணி சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளார். 

இதுகுறித்து எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டு அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

வசந்தமணி என்ற இளைஞர் மரணத்துக்கும் உங்களுக்கும் தொடர்புள்ளதாகச் செய்திகள் பரவுகிறதே?

``வசந்தமணி மரணத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடர உள்ளோம்.''

வசந்தமணிக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டி இருந்ததாகவும் அதைக்கேட்ட அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறதே?

``நான் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அவர்தான் மேடை அமைத்துக் கொடுத்தார். அதற்காக அவருக்கு கொடுக்க வேண்டிய 11,000 ரூபாயைக் காவல்துறை முன்னிலையில் கொடுத்துவிட்டேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.''

வசந்தமணியை உங்கள் ஆதரவாளர்கள் கொடூரமாகத் தாக்கியதால்தான் அவருக்குத் தலையில் அடிபட்டு தற்போது இறந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

``நாங்கள் வசந்தமணியைத் தாக்கினோமா? (ஆவேசக் குரலில்) வசந்தமணிதான் என்னைத் தாக்கினார். என் ஆதரவாளர்கள் அவர் என்னை தாக்கியபோது அதைத் தடுத்தார்கள். வசந்தமணியை என் ஆதரவாளர்கள் கொடூரமாகத் தாக்கியதாக கூறுவது பொய். அவர் மரணத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அவர் என்னைத் தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. வசந்தமணி என் கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தார். அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. என்னைப் பற்றித் தேவையில்லாமல் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்.''

யார் அவதூறு பரப்புகிறார்கள்... அ.தி.மு.க-வின் இன்னொரு அணியாக இருக்கும் என்று சந்தேகப்படுகிறீர்களா?

``அண்ணன் அப்படியெல்லாம் செய்யமாட்டார். இது லோக்கல் எதிரிகள் யாரோ செய்திருக்கிறார்கள்'' என்று போன் இணைப்பைத் துண்டித்தார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க