வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (31/01/2018)

கடைசி தொடர்பு:12:05 (31/01/2018)

`பத்து மூட்டை நெல்லுக் கொட்டலாம்; கெட்டுப்போகாது' - முத்தம்மாவின் ஆச்சர்ய குதிர்கூடை

நெல்லை சேமித்து வைக்கும் குதிர்களை குச்சிகளால் முடைந்துத் தருகிறார்கள் ஒரு கிராமத்தில். இதை அங்குள்ளவர்கள் குடிசைத் தொழிலாகவே செய்துவருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், வையாபுரிபட்டி அருகில் இருக்கிறது கல்லுக்குடியிருப்பு கிராமம். இங்குள்ளவர்கள் கூடை முடைவதை தங்களது குலத் தொழிலாக இன்றும் செய்துவருகிறார்கள். சாணி கூடை, குப்பைக்கூடை, கிடைக்கூடை, கவிழ்ப்புக்கூடை, சோற்றுக்கூடை என்று பல விதங்களில் இங்குள்ளவர்கள் கூடை முடைகிறார்கள். அதில், இவர்கள் செய்யும் நெற்குதிர்தான் ஏரியாவில் மிகப் பிரபலம். அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், சில வரலாற்றுப் பின்புலன்களைப் பார்த்துவிடுவோம்.

'மாடு கட்டி போரடித்தது போதாதென்று யானைக்கட்டி போரடித்த இனம் தமிழ் இனம்' என்று பாரம்பர்யப் பெருமையை இன்றும் கிராமத்துப் பெரியவர்கள் இழுத்து, முழக்கிச் சொல்வதைக்கேட்கலாம். அப்படி யானைக்கட்டி போரடித்து சேகரித்த நெல்லை சேமிப்பதற்கென்றே பெரிய பெரிய பத்தாயம், களஞ்சியம், குதிர்கள் விவசாய பெருங்குடி மக்களின் வீடுகளில் இருக்கும். ஆயிரம் மூட்டைகளில் ஆரம்பித்து, இரண்டாயிரம் மூட்டைகள் வரை இந்த பத்தாயங்களிலும் குதிர்களிலும் நெல்லை சர்வசாதாரணமாக சேமித்துவைப்பார்கள். இதில் சேர்த்துவைக்கப்படும் நெல் பல வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல், பூச்சிகள் அரிக்காமல் அப்படியே இருக்கும். அந்தக் குதிர்தான் இப்போது வெறும் பத்து மூட்டைகள் மட்டுமே கொள்ளும் சிறு குதிர்களாகக் குறுகிவிட்டது. பெருவளமாக இருந்த விவசாயம் இன்றைக்கு ஏளனமாகப் போய்விட்டதின் ஆகச் சிறந்தக் குறியீடாக இந்தக் கூடைக்குதிர் காட்சித் தருகிறது. ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்தக் குதிரை அனுபவம் வாய்ந்த மூத்த ஆண்களும் பெண்களும் முடைகிறார்கள். நாம் கல்லுக்குடியிருப்புக்குச் சென்றபோது, முத்தம்மா என்ற பெண்மணி அப்படியானதொரு குதிரை முடைந்து  வைத்திருந்தார்.

ஓட்டைகள் நிரம்பிய இந்தக்கூடைக் குதிரில் எப்படி நெல் கொட்டுவார்கள்?' என்று நீங்கள் இப்போது கேட்கும் அதே கேள்வியை, குதிர்கூடை முடையும் முத்தம்மாவிடம் கேட்டோம். அவர் தொழில்முறை விஷயங்கள் அத்தனையையும் விவரித்தார். ``பச்சையான குச்சிகளை காடு, கரணிகளில் போய் எடுத்துட்டு வருவோம். வரப்பலான் குச்சி, தெரணிக்குச்சி, வாஞ்சான்குச்சி, ஊடுஉசலைக்குச்சி, வம்பரக்குச்சினு இந்தக் கூடை முனையறதுக்குன்னே தனிவகைகள் இருக்கு. இந்தக்குச்சிகளைக் கொண்டுதான் குதிர்முனைவோம். காரணம், இந்தக்குச்சிகளை பூச்சி, பொட்டு அரிக்காது. அடித்தட்டு, மேல்தட்டு, குதிர்னு மூன்று வகைகளை பண்ணிக்கணும். அந்த வேலை முடிஞ்சதும் மூன்றையும் வெயிலில் நல்லா 'மொடமொட'னு காயவெச்சுடுவோம். அதன் பொறவுதான் முக்கிய வேலையே இருக்கு. நைஸ் களிமண்ணைக் குழைச்சு, இண்டுஇடுக்கு ஒண்ணுவிடாம முழுக்க அடைச்சிடுவோம். சித்தெறும்பு மட்டுமில்ல, காத்துக்கூட உள்ளே நுழைய முடியாது. அதையும் காயவெச்சு முடிச்சா, குதிர் தயார். இதில், பத்து மூட்டைகள் நெல்லுக் கொட்டலாம்" என்றார்.

அவரிடம் விற்பனைக் குறித்த விவரங்களைக் கேட்டோம். "இந்தக் குதிர் தேவைப்படுறவங்க ஆர்டர் கொடுப்பாங்க. மத்தபடி தனியாக சந்தைகளில் கிடைக்காது. எத்தனை மூட்டைகள் நெல் சேமிக்கற மாதிரி குதிர் கேக்கறாங்களோ, அதுக்குத் 'தக்கனா' மாதிரி, கூடக்குறைச்சலா விலையும் இருக்கும்" என்றார் முத்தம்மா.