அரோகரா.. அரோகரா கோஷத்தால் அதிர்ந்த பழநி! கோலாகலமாக நடந்த தைப்பூசத் தேரோட்டம்

தைப்பூசத்தையொட்டி பழநியில் காலையில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் எழுப்பிய ‘அரோகரா..அரோகரா’ கோஷத்தால் பழநி நகரமே அதிர்ந்தது. 

தைப்பூச நாளான இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் திருக்கோயில்களில் தேரோட்டம் அதிவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல் பழநியில் நடக்கும் தேரோட்டம் மிகவும் சிறப்புவாய்ந்தது. முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழநியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் நடக்கும். ஜனவரி 25-ம் தேதி தொடங்கிய தைப்பூசத் திருவிழா தொடர்ந்து நடந்துவருகிறது. தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தற்போது பழநியில் ஆறு லட்சம் பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். இவர்கள் எழுப்பும் ‘அரோகரா.. அரோகரா’ கோஷத்தால் பழநி நகரமே அதிர்கிறது.

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், ரோப்கார், வின்ச் நிலையங்களில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று மலைக்கோயிலுக்கு ஒருவழிப்பாதையில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் இறங்கும் வகையில் பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

தைப்பூசத் திருவிழாவின் 6-வது நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று காலை 10.40 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. முருகன் மலைக்கோயிலில் வீற்றிருந்தாலும் தைப்பூசத் தேரோட்டம், மலையில் நடக்காது. ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்துதான் தேரோட்டம் தொடங்கி, நான்கு ரதவீதிகளில் உலாவரும் தேர், மீண்டும் பெரியநாயகி அம்மன் கோயிலை வந்தடையும். இன்று சந்திரகிரணம் என்பதால், வழக்கமாக மாலையில் நடக்கும் தேரோட்டம் இந்த ஆண்டு காலையில் நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!