வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (31/01/2018)

கடைசி தொடர்பு:13:38 (31/01/2018)

``ஆந்திர காவல்துறையை ஏமாற்றிய டெக்னிக்!... கொள்ளையன் சொன்ன சுவாரஸ்யத் தகவல்... - வேட்டையாடு, விளையாடு! பகுதி-19 ..                                      .காவல்துறை 

கொள்ளை, திருட்டுக்கு வெள்ளிக்கிழமையைத் திட்டமிட்டது ஏன்?... என்பதை முண்டேல்பாஜூ சொல்ல ஆரம்பித்தான். 'சார், பொதுவாகவே ஆந்திராவில் நாங்கள் இருக்கும் பகுதியில் விடுமுறை நாள்களில் மட்டும் திருட்டு நடந்துவிடும். பொருள்கள்  திருடு போனதும் ஆந்திரப் போலீஸார் எங்களைத்தான் பிடித்துப் போவார்கள். எந்த வேலைக்கும் போகாமல்  நாங்கள் செழிப்பாக இருப்பதைப் பார்த்துத்தான் அவர்களுக்கு எங்கள்மீது சந்தேகம் வந்தது. எங்களுக்கு அப்போதும் திருட்டுதான் தொழில். ஆனால், ஆந்திராவில் திருடியதில்லை. பெங்களூரு, ஹைதராபாத், கர்நாடகா, மங்களூர்  ஆகிய இடங்களுக்குப் போய்தான் திருடுவோம். திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் பகல் நேரத்தில் தெருத் தெருவாகப் போய்  திருடுவதற்கு வசதியான இடங்களை வேவு பார்த்துவிட்டு வருவோம். ஏதாவது சின்ன லாட்ஜில் அறை எடுத்துத் தங்குவோம். புதன், வியாழக்கிழமை இரவுகளில் திருடிவிட்டு வெள்ளிக்கிழமை ஏதாவது லாட்ஜில் தங்கி விடுவோம். சனிக்கிழமை காலை, கிளம்பி ஞாயிற்றுக் கிழமை விடிகாலை ஆந்திராவில் இருப்போம். ஆந்திராவில் நடக்கும், திருட்டுகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் ஆந்திர போலீஸார் எங்களைப் போல் உள்ளவர்களைத்தான் அடித்து, இழுத்துக்கொண்டு போய் விசாரிப்பார்கள். இரண்டு நாள்கள் எங்களைப் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்துவிட்டு புதன்கிழமை காலையில்தான் ரிலீஸ் செய்வார்கள். நாங்கள்  வழக்கம் போல் ரயிலைப் பிடித்து வெளியூருக்குப் போய் விடுவோம். எப்போதும் போல் இரண்டு நாள்கள் அந்த ஊர்களில் வேவு பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை வேலையை முடித்துக்கொண்டு, ஞாயிறு காலையே ஆந்திராவில் இருப்போம். மறுபடியும் ஆந்திரா போலீஸ் எங்களைப் பிடிக்கும், இரண்டுநாள் வரை அடித்து, உதைத்து விசாரணை நடத்திவிட்டு எங்களை அனுப்பி விடுவார்கள். இப்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆந்திரப் போலீஸாரிடம் நாங்கள் சிக்கி அடி-உதை வாங்குவது  தொடர்கதை போல நடந்துகொண்டே இருந்தது. இந்த விவகாரத்துக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று யோசித்தோம்.

தனிப்படை எஸ்.ஐ.ராஜ்குமார் (அன்று)எங்கள் 'தொழில்குரு'வைப் போய்ப் பார்த்து அழுதோம். 'செய்யாத தவற்றுக்கு நாங்கள் உதைபட்டு சாகிறோம், இந்தச் சிக்கலில் இருந்து மீள வழி சொல்லுங்கள்' என்று அவரிடம் கேட்டோம். அவர், 'நீங்கள் எந்த ஊருக்குத் திருடப் போனாலும், சனிக்கிழமை மதியம், ஆந்திர டவுன் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போய் விடுங்கள். முடிந்தால் ஸ்டேஷனுக்கே நேரடியாகப் போய்ப் பேசுங்கள்.  நாங்கள் இங்கேதான் இருக்கிறோம், ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கும் மின் கம்பத்தின் கீழேதான் படுத்துக் கொள்கிறோம், நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நாங்கள் வருகிறோம் என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் மறக்காமல் சொல்லிவிட்டு வந்து விடுங்கள். நீங்கள் அந்த இடத்தில்தான் படுத்துக் கொள்கிறீர்களா என்று நைட் ரவுண்ட்ஸ் போகும்போது போலீஸார் வந்து பார்ப்பார்கள். நீங்கள் அங்கு படுத்திருப்பதை உறுதி செய்து கொள்வார்கள், அதன் பிறகு விடுமுறை நாள்களில் நடக்கும் எந்தக் கொள்ளைக்கும் உங்களைக் கூப்பிட்டு விசாரிக்க மாட்டார்கள்.' என்று ஆலோசனை சொன்னார். நாங்களும் எங்கள் தொழில்குரு சொன்னதை  ஏற்றுக்கொண்டோம். அவர் சொன்னது போல் ஒவ்வொரு வாரமும் ஒரு ஊருக்குப் போவோம். புதன் முதல் வெள்ளிக்கிழமை வரைதான் வெளியூரில் இருப்போம்.  விடுமுறை நாள்களில் ஆந்திராவில் இருப்போம். போலீஸ் கண்களில் படுவது போல் நடமாட்டத்தை வைத்துக்கொள்வோம். போலீஸார் எங்களைப் பார்த்ததும், 'என்னடா ஒழுங்கா இருக்கீங்களா?' என்று கேட்டு வைப்பார்கள். 'காலி மதுபாட்டில்களை பொறுக்கிக் கொடுத்து ஏதோ வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொள்கிறோம் அய்யா' என்று  நாங்களும் அவர்களுக்குப் பதில் சொல்வோம். சில நேரங்களில், அவர்களுக்கே எங்கள் மீது பரிதாபம் வந்துவிடும். 'எப்போது பார்த்தாலும் நீங்க மூணுபேரு தானேடா எங்களிடம் மாட்டுகிறீர்கள், வீட்டில் போய்ப் படுக்கக் கூடாதா? ஏன் ரோட்டில் படுக்கிறீர்கள், உடுத்திக்கொள்ள நல்ல துணி கூடவா இல்லை?' என்று இரக்கத்துடன் கேட்பார்கள்.

தனிப்படை முதல்நிலைக்காவலர் ஜி.லோகநாதன் (அன்று)அடுத்ததாக  டீக்கடைக்குப் போய் டீ சொல்லி விட்டு வரவும், கடைகளுக்குப் போய் வரவும் எங்களைப் பயன்படுத்தினர். போலீஸாரின் இரக்கத்தை எங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முடிவெடுத்தோம். முதலில் எனக்கு அந்த வாய்ப்பு அமைந்தது. போலீஸ் ஸ்டேஷன் எதிரேயிருந்த காலி இடத்தில் முதல் இரண்டு நாள்கள் உட்கார்ந்துகொண்டே தூங்கினேன். ரவுண்ட்ஸ் போய்விட்டு நள்ளிரவில் வந்த இன்ஸ்பெக்டர், என்னை லத்தியால் தட்டி, 'டேய், நல்லா காலை நீட்டித் தூங்குடா' என்றார். நான் பயப்படுவதுபோல் எழுந்து கைகளைக் கட்டிக்கொண்டு நின்றேன். அடுத்து,  இன்ஸ்பெக்டர் சொல்லாமலே அவர் ஜீப்பை தண்ணீர் ஊற்றிக் கழுவித் துடைக்கத் தொடங்கினேன். அடுத்தநாள், இன்ஸ்பெக்டர் வாங்கிக் கொடுத்ததாக  தலைக்கு ஒரு தலையணையும், போர்த்திக்கொள்ள ஒரு போர்வையையும் ஸ்டேஷன் ஏட்டு கொண்டு வந்துகொடுத்தார். 'எஸ்.ஐ. பைக்கைத் துடைத்து விட்டுப் படுக்கப் போ' என்று  பைக் சாவியை என் கையில் கொடுத்தார்.  கைச் செலவுக்குப் பத்துரூபாயும் கொடுத்தார். ஆந்திராவில் நடக்கும் விடுமுறை நாள் திருட்டில் எங்களுக்குத் தொடர்பு இல்லை என்று காட்ட, போலீஸின் கரிசனம் எங்களுக்குத் தேவைப்பட்டதால் நாங்கள் இப்படியெல்லாம் செய்தோம். வெளியூர் திருட்டை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு வந்து விட்டால் போலீஸ் ஸ்டேஷன் பார்வையில் படும்படியே இருப்போம். ஒருவழியாக பெங்களூரு, ஹைதராபாத், கர்நாடகா, மங்களூர்  போன்ற இடங்களில் முக்கியமான அனைத்துப் பகுதிகளிலும்  திருடி விட்டோம். அடுத்து, திருட வேண்டிய இடம் தமிழ்நாடுதான் என்று முடிவெடுத்து  தமிழ்நாட்டுக்கு  ரயில் ஏறினோம்.

அப்போது...   

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்


டிரெண்டிங் @ விகடன்