வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (31/01/2018)

கடைசி தொடர்பு:13:28 (31/01/2018)

`துரைமுருகன்கூட அருகில் வர வேண்டாம்!'   - 'தலைமை'ப் பரிசோதனையில் ஸ்டாலின்

ஸ்டாலின்

தி.மு.க தொண்டர்களின் குறைகளை ரகசியமாகத் தெரிவிக்கும் வகையில் நாளை முதல் தன்னந்தனியாக ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார் ஸ்டாலின். `மாநில, மாவட்ட நிர்வாகிகள்குறித்த எந்தப் புகாரையும் தொண்டர்கள் தெரிவிக்கலாம். `இந்த ஆய்வின்போது உடனிருக்க வேண்டாம்' என துரைமுருகனுக்கும் மறுப்பு தெரிவித்துவிட்டார் ஸ்டாலின்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் தி.மு.க  செயல் தலைவர் ஸ்டாலின். தேர்தலில் சரிவரப் பணியாற்றாத கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டுவிட்டனர். ' மாவட்டச் செயலாளர்கள் பலரும் தேர்தல் பணி செய்யாமல் முடங்கிவிட்டனர். கீழ்மட்ட நிர்வாகிகளை நீக்குவதால் என்ன பலன்.. உள்ளாட்சியிலும் இந்தத் தோல்வி தொடரக் கூடாது' எனத் தி.மு.கவினர் மத்தியில் விவாதம் எழுந்தது. இதையடுத்து, தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் குறித்தும் மாவட்டங்களில் நடக்கும் கட்சிப் பணிகள் குறித்தும் தொண்டர்களிடம் ரகசியமாக ஆய்வை நடத்த இருக்கிறார் ஸ்டாலின். இதுகுறித்து கடிதம் வெளியிட்ட ஸ்டாலின், ' கட்சியின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன, அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கட்டத்திலும் எந்தமாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக் கொள்வதற்காகவே, இந்தக் கள ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அடிக்கடி நேரில் வந்து கட்சி நிர்வாகிகளையும் தோழர்களையும் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை உங்களில் ஒருவனான நான், கட்சியின் செயல்தலைவர் என்ற முறையில் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தாலும் இந்தமுறை கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உங்களை அழைத்து உரையாடவும் அதன்வழியே கட்சியை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன். எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய கட்சிப் பணிகள்குறித்தும், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்தக் களஆய்வு துணை நிற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன. போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக கட்சியின் களஆய்வு அமையட்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

நாளை தொடங்க இருக்கும் களஆய்வு குறித்து நம்மிடம் விவரித்தார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``ஆர்.கே.நகர் துரைமுருகன்இடைத்தேர்தலுக்குப் பிறகு கட்சி சீனியர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார் ஸ்டாலின். 'உள்ளாட்சியிலும் படுதோல்வி அடைந்துவிடக் கூடாது' என்ற கவலையின் காரணமாகவே தன்னந்தனியாக ஆய்வை நடத்துகிறார். இந்த ஆய்வின்போது, `முதன்மை நிலையச் செயலாளர் துரைமுருகன் உள்பட சீனியர்கள் யாரும் இருக்க வேண்டாம்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். தி.மு.க வரலாற்றிலேயே துரைமுருகன் இல்லாமல் எந்த ஆய்வும் நடந்தது கிடையாது. இதற்குக் காரணம், புகார் கூறும் தொண்டர்கள் பற்றிய விவரம் மேல்மட்ட நிர்வாகிகளின் கவனத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதால்தான். தவிர, சில மாவட்டச் செயலாளர்கள்மீது நடவடிக்கை எடுத்தாலும், 'இவர்தான் காரணம்' எனப் பழிதீர்க்கும் வேலையில் இறங்கிவிடுவார்கள். 

இதை அடிப்படையாக வைத்துத்தான், ' தளபதியைத் தவிர வேறு யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்' என ஒற்றை வரியில் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக புகார் பெட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் பெட்டியில் போடப்படும் மனுக்களை கணினியில் பதிவேற்ற இருக்கிறார்கள். இதற்காக, எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் தலைமையில் டீம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் சிஸ்டத்துக்குள் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சிஸ்டமேடிக்காக சரி செய்வதுதான் செயல் தலைவரின் நோக்கம். இந்தப் புகார் மனுக்களை மாவட்டவாரியாக பிரித்தெடுக்க வழக்கறிஞர் அணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களும் லேப்டாப்பில் பதிவேற்றப்பட இருக்கிறது. புகாரின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு, மாநில நிர்வாகியாக இருந்தாலும் மாவட்டச் செயலாளராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நீக்கப்படுவார்கள். கட்சியை சீரமைக்கும் முக்கியப் பணியாக இதைக் கருதுகிறார் ஸ்டாலின். ஒருமாதம் இந்த ஆய்வு நீடிக்க இருக்கிறது" என்றார் விரிவாக. 

" கடந்த சில மாதங்களாக செயல் தலைவரின் செயல்பாடுகள் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதே கருத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 'இதே நிலை நீடித்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல' எனக் கருதுகிறார் ஸ்டாலின். 'அழகிரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளைப் போல, நாளையே சில மாவட்டச் செயலாளர்களும் பேசத் தொடங்கிவிட்டால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுவிடும்' எனக் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவாகத்தான் தனிநபர் ஆய்வைத் தொடங்குகிறார் ஸ்டாலின். முப்பது நாள் முடிவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்தே, தொண்டர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்படும்" என்கிறார் அறிவாலயப் பிரமுகர் ஒருவர். 

ஆய்வுகுறித்து கடிதம் எழுதிய ஸ்டாலின், ' ஊடகங்களின் கருத்துகளும் கணிப்புகளும் தி.மு.க-வை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. 'எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே' என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருந்தார். ' அவருடைய ஆய்வு கட்சியை சீரமைக்குமா?' என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புகள் மத்தியில் நிரம்பி வழிகிறது.