வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (31/01/2018)

கடைசி தொடர்பு:15:20 (31/01/2018)

`12,000 பேர் வேலை இழப்பார்கள்' - அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் அன்புமணி

"நாடு முழுவதும் உள்ள 5 படைத்துறை ஆடைத் தொழிற்சாலைகளும் ஏப்ரலுடன்  மூடப்படவுள்ளன. இதனால் ஆவடி தொழிற்சாலையில் 2,321 தொழிலாளர்கள் உட்பட நாடு முழுவதும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது அவர்களின் குடும்பங்களைப் பாதிக்கும்" என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி அச்சம் தெரிவித்துள்ளார்.

anbumani

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னையை அடுத்த ஆவடியில் செயல்பட்டு வரும் படைத்துறை ஆடைத் தொழிற்சாலையை மூட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தொலைநோக்குப் பார்வையற்ற இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இந்திய ராணுவத்தினருக்கான சீருடைகளைத் தயாரிக்க உத்தரப்பிரதேசத்தில் 4 தொழிற்சாலைகளும், சென்னையை அடுத்த ஆவடியில் ஒரு தொழிற்சாலையும் செயல்பட்டு வருகின்றன. ராணுவத்தினருக்குத் தேவைப்படும் அனைத்து வகையான சீருடைகளையும் இந்தத் தொழிற்சாலைகள் தான் தயாரித்து வழங்கி வருகின்றன. ஆனால், ராணுவ வீரர்களுக்கு சீருடைகளுக்குப் பதிலாக சீருடைப் படியாக ராணுவத்தினரின் பணி நிலையைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கலாம் என்று ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்ததையடுத்து, படை வீரர்களுக்கு சீருடை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து  நாடு முழுவதும் உள்ள 5 படைத்துறை ஆடைத் தொழிற்சாலைகளும் ஏப்ரலுடன் மூடப்படவுள்ளன. இதனால் ஆவடி தொழிற்சாலையில் 2,321 தொழிலாளர்கள் உட்பட நாடு முழுவதும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது அவர்களின் குடும்பங்களைப் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, சீருடைத் தொழிற்சாலைகளை மூடும் மத்திய அரசின் முடிவு நாட்டின் பாதுகாப்புக்கும்,  ராணுவத்தின் மரியாதைக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ராணுவத்தினருக்கு பயிற்சிக்காக ஒரு சீருடை, போர்க்களத்தில் பயன்படுத்த ஒரு சீருடை, அணிவகுப்பு மற்றும் அலுவலகப் பயன்பாட்டுக்கு தனிச் சீருடை என மொத்தம் 3 வகையான சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. ராணுவச் சீருடைகளின் சிறப்பே அவற்றின் மிடுக்குதான். அனைத்து வீரர்களும் ஒரே மாதிரியாக சீருடை அணிந்து பயிற்சி மேற்கொள்ளும்போதும், அணி வகுக்கும்போது அந்த உடைகளுக்கு தனி மரியாதைக் கிடைக்கும். 

அனைத்து சீருடைகளும் அவற்றுக்கான வழிகாட்டு விதிமுறைகளுடன் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். தனித்தனி இடங்களில் சீருடைகள் தயாரித்து விற்கப்பட்டால், அவை ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டு இருக்காது என்பதால், அவற்றின் மிடுக்கு குலைந்து விடும். அதுமட்டுமின்றி ராணுவச் சீருடைகள் தனியாகத் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்டால் அதை யார் வேண்டுமானாலும் அணியலாம் என்ற நிலை உருவாகி விடும். அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. இதனால் ராணுவச் சீருடைகளுக்கு உரிய கம்பீரமும், மிடுக்கும் பறிக்கப்பட்டு விடும்.

மேலும், ராணுவ உடைகள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாமல் வெளியில் தயாரிக்கப்பட்டால் அது தேச விரோதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரின் கைகளுக்கு எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும். இதற்கெல்லாம் மேலாக மத்திய அரசு வழங்கும் ரூ.10,000 படியில் தரமான சீருடைகளை வாங்குவதும் சாத்தியமற்றது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரையை அப்படியே செயல்படுத்துவது மிக மோசமான, விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

சென்னை ஆவடியில் இயங்கிவரும் படைத்துறை ஆடைத் தொழிற்சாலை ஏராளமான விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஐ.நா படை வீரர்களுக்கு இந்த ஆலையிலிருந்து தயாரித்து வழங்கப்பட்ட ஆடைகள் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளன. இத்தகைய சிறப்புகளைக்கொண்ட  ஆடை தொழிற்சாலைகளை மூடக்கூடாது. சென்னை ஆவடி உட்பட நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 5 படைத்துறை ஆடைத் தொழிற்சாலைகளும் தொடர்ந்து இயங்கும் என்றும் படைவீரர்களுக்கு பாதுகாப்புத் துறையே ஆடைகளை தயாரித்து வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.