வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (31/01/2018)

கடைசி தொடர்பு:13:39 (31/01/2018)

10 நாளில் குற்றப்பத்திரிகை; 28 நாளில் தண்டனை! கிரிமினல் அறிவழகன் வழக்கில் சென்னை போலீஸ் அதிரடி

அறிவழகன்

திருடச் செல்லும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறிய செக்ஸ் கிரிமினல் அறிவழகன் மீது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில், வழிப்பறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 28 நாளில் அறிவழகனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை வாங்கிக் கொடுத்துள்ளது சென்னை போலீஸ் டீம். 

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வில்லியம்ஸ். இன்ஜினீயரான இவர், சொந்தமாகப் பிரின்டிங் தொழில் செய்துவருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வேளச்சேரி பஸ் நிலையம் அருகே வல்லியம்ஸ் பைக்கில் சென்றபோது அவரை வழிமறித்த மர்மநபர், பணம், செல்போனை பறித்துச் சென்றார். இதுதொடர்பாக வில்லியம்ஸ் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலு விசாரணை நடத்தி அறிவழகனைக் கைது செய்தார். விசாரணையில் அறிவழகன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர், சென்னையில் அம்பத்தூர், கிண்டி எனப் பல பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அப்போது, அங்குள்ளவர்களிடம் அன்பாகப் பழகும் அறிவழகன், அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்வார். அதன்பிறகுதான் தன்னுடைய கைவரிசையைக் காட்டுவார். கிண்டியில் அறிவழகன், தங்கியிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறியதோடு நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ளார்.

அதுதொடர்பாகக் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அறிவழகன்மீது பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதவிர வழிப்பறி, திருட்டு என 20-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் அறிவழகன் மீது உள்ளன. இதனால் அறிவழகனைக் குண்டர்சட்டத்தில் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் அறிவழகன் மீது வில்லியம்ஸ் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு அறிவழகனுக்கு 28 நாளில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். 

அறிவழகன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை தலையாரியாக வேலைபார்க்கிறார். அறிவழகனின் தம்பி இன்ஜினீயராக வேலைபார்க்கிறார். அறிவழகனும் இன்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூருவில் பணியாற்றியுள்ளார். அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார். தவறான பழக்கம், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்தநிலைமைக்குத் அறிவழகன் தள்ளப்பட்டுள்ளார். அறிவழகன் மீது பாலியல் புகார் கொடுக்க தயங்கிய நேரத்தில் துணிச்சலாகக் கிண்டியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த வழக்கிலும் அறிவழகனுக்கு விரைவில் தண்டனை வாங்கிக் கொடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

இதற்கிடையில், அறிவழகன் மீதான வழிப்பறி வழக்கை சிறப்பாக விசாரித்துள்ளார் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலு. அவருக்கு உறுதுணையாகப் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, அடையாறு துணை கமிஷனர் ரோஹித்நாதன், உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் இன்ஸ்பெக்டர் வேலுவுக்கு இந்த வழக்கில் பலவகையில் முழு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். இதனால்தான், வழக்குப்பதிவு செய்த 10 நாளில் அறிவழகன் மீது குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த  மாஜிஸ்திரேட் மோகனா,  அறிவழகனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.