மலைக் கோயிலுக்குச் சிறப்பு பூஜைக்காக சென்றவர்களை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!

லோகமுத்திரை சிலை -உடைக்கும் முன்பு

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகத்தியர் - லோகமுத்திரை சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வனத்துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி சிலை உடைப்பு நடந்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. 

நெல்லை மாவட்டம், பாபநாசம் மலையில் அகத்தியர் அருவியின் அருகில் கோடிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் முன்பாக அகத்தியர் தனது மனைவி லோகமுத்திரையுடன் ரதத்தில் நிற்பது போன்ற சிலை சில வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. கோடிலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இந்தச் சிலைகளையும் வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தைப்பூச திருவிழாவையொட்டி இன்று கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. இதற்காக இந்தக் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், அங்குள்ள லோகமுத்திரை சிலையின் தலைப் பகுதி முழுமையாக உடைத்து நொறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

உடைக்கப்பட்ட சிலை

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் கடந்த 28-ம் தேதி முதல் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுவருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட யாரையும் உள்ளே செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை. அதனால் அதற்கு முன்பாகவே இந்தச் சிலை உடைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்கிற தகவல் தெரிய வந்திருக்கிறது. சிலை உடைக்கப்பட்டது தொடர்பான படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை உடைப்பு பற்றி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!