கரூர் வெண்ணெய்மலையில் கோலாகலமாக நடந்த தைப்பூசத் தேர்த்திருவிழா!

தைப்பூசத் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பாக இன்று கொண்டாடப்படுகிறது. கரூரில் பிரசித்திபெற்ற வெண்ணெய்மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இந்தத் தேரோட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தேரோட்டத்தைக் கண்டுகளித்தனர்.

பழநி முருகன் கோயிலில்தான் இந்த விழா முதன்மையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்தான், கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற வெண்ணெய்மலையில் தைப்பூசத் திருவிழா இன்று களைக்கட்டியது. காலை பத்தரை மணிக்குத் தொடங்கிய தேரோட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜூம் வடத்தைப் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார்கள். அதைதொடர்ந்து, பக்தர்கள் சேர்ந்து தேர் வடத்தைப் பிடித்து தேரை இழுத்தனர். மக்கள் அனைவரும், 'முருகா, கந்தா, கடம்பா' என்று தேரைப் பார்த்து உச்சரித்து, கன்னத்தில் போட்டுக்கொண்டனர். இந்தத் தேரோட்டத்தை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர். பக்தர்களைப் பாதுகாப்பாக தேரில் ஏறிப் பார்க்க, கோயில் நிர்வாகமும் காவல்துறையும் அனுமதித்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நம்மிடம் பேசிய பக்தர் ஒருவர், ``இந்தத் தைப்பூசத் தேரோட்டத்தைப் பார்த்தாலே, மனசுக்குள் அப்படி ஒரு ஆனந்தம். இந்தத் தேரோட்டத்தைப் பார்க்கவே தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து கண்டுகளித்தார்கள். இந்தக் காட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஆனந்தக்காட்சி. அந்தக் காட்சியை பார்த்தது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். அதனால், எங்க சந்ததிக்கே புண்ணியம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!