`அரசாணையை ரத்து செய்யுங்கள்' - இறக்குமதி மணல் விவகாரத்தில் 5 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | madurai HC issues notice in Sand smuggling case

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (31/01/2018)

கடைசி தொடர்பு:16:15 (31/01/2018)

`அரசாணையை ரத்து செய்யுங்கள்' - இறக்குமதி மணல் விவகாரத்தில் 5 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர் பிரைசஸ் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் ராமையா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதிசெய்து தூத்துக்குடியில் உள்ள புதிய துறைமுகத்தில் வைத்துள்ளோம். இதற்காக ஜி.எஸ்.டி உள்பட 38,39,347 ரூபாயை வரியாக செலுத்தியுள்ளோம். இந்நிலையில், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 96 டன் மணலை 6 லாரிகளில் கொண்டுசென்றபோது அதைக் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் சரியாக இருந்தபோதிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனை தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகுறித்த விவரத்தை வழக்கு விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர் எனத் தெரிவித்தார். அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே இறக்குமதி மணல் முறைப்படுத்தும் நோக்கில் அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இதுகுறித்து பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலர், நீராதாரத்துறையின் தலைமைப் பொறியாளர், புவியியல் மற்றும் கனிமவளத்துறையின் ஆணையர், இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.