கலங்கடித்த போலி நியமன ஆணைகள்! சிக்கிக்கொண்ட போக்குவரத்துத்துறை துணை மேலாளர்

போலி பணி நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்ட துணை மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், நெல்லை, கும்பகோணம் என தமிழகத்தில் 8 இடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டங்கள் இருக்கின்றன. இங்கு பணியாற்றி வரும் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் அனைவரும் தேவைக்கேற்றபடி மற்ற கோட்டங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி செல்வகுமார், கிருஷ்ணன் என்ற இரண்டு தொழில்நுட்பப் பணியாளர்கள் சேலம் கோட்டத்திலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி விழுப்புரம் கோட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தனர். அதையடுத்த சில தினங்களில் அந்த இருவரும் தங்களது சொந்த மாவட்டமான கடலூருக்கு பணியிட மாற்றம் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர்.

விழுப்புரம்

அப்போதுதான் அவர்கள் போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்துப் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தையடுத்து உடனடியாக விசாரணையில் குதித்தனர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள். போக்குவரத்துக் கழகத்தின் துணை செயலாளர் பிரபாகரன் தலைமையிலான குழு விழுப்புரம் கோட்ட அலுவலகத்தில் மேற்கொண்ட ஆய்வில் போலி பணி நியமனம் மூலம் கடலூர், பண்ருட்டி பணிமனையில் பணிபுரிந்த கோகுலகிருஷ்ணன், ஜெயபால், வெங்கடேசன், ஆனந்த், செல்வகுமார், கிருஷ்ணன் ஆகிய 6 பேர் அடையாளம் காணப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்களுக்கு முறைகேடாகப் பணியிட மாற்றம் வழங்கியதாக விழுப்புரம் கோட்டத்தின் துணை மேலாளர் குமார், அலுவலர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார், துரை உள்ளிட்ட நான்கு பேர் இரு தினங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நபர் ஒன்றுக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிய போலி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் அளித்த புகாரின் பேரில் துணை மேலாளர் குமார் உள்ளிட்ட நான்கு பேரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலி பணி நியமனத்தின் மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பணி அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதனால் விசாரணையைத் தீவிரமாக்கி போலிப் பணியாளர்களைக் கண்டறிய வேண்டும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!