`என் குழந்தையைக் காப்பாத்துங்க' - டாக்டரின் கிடுக்கிப்பிடியால் சிக்கிக்கொண்ட தாய்

பிறந்து நான்கு நாள்களே ஆன பச்சைக் குழந்தையைப் பெற்றத் தாயே  மூக்கைப் பொத்தி கொலை செய்த பகீர் சம்பவத்தால் பரபரத்துக்கிடக்கிறது அறந்தாங்கி.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வசிப்பவர் கார்மேகம். இவருக்கும் புதுக்கோட்டை அருகில் உள்ள வேள்வரை என்ற பகுதியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. இருவருக்கும் திருமணம் நடந்தபோதே சரண்யா ஏழு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, கார்மேகமும் சரண்யாவும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி இருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், "கல்யாணம் இப்போதானேப்பா ஆச்சு. ஆனா, உன் பொண்டாட்டி நிறைமாதமா இருக்காளே எப்படி?" என்று `ஜாடைமாடை'யாகக் கேட்டிருக்கிறார்கள். அதற்குக் கார்மேகம், "சரண்யா கூட ரொம்ப நாளா பழகிட்டு இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ். அந்தப் பழக்கத்துல இணைஞ்சுட்டோம். சரண்யா வயித்துல வளர்றது எம் புள்ளைதான்" என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில், சரண்யாவுக்கு இடுப்புவலி ஏற்பட, அவரை அறந்தாங்கி அரசுப் பொது மருத்துவமனையில் கடந்தவாரம் சேர்த்திருக்கிறார்கள். 28-ம் தேதி நள்ளிரவு பெண் பிள்ளை பிறந்திருக்கிறது. சிசு நல்ல ஆரோக்கியத்துடன் சரியான எடையுடன் பிறந்திருக்கிறது. நான்கு நாள்கள் கடந்த நிலையில், இன்று அதிகாலையில், நர்ஸை அவசரமாக அழைத்த சரண்யா, பிள்ளைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கு. காப்பாத்துங்க என்று பதறியிருக்கிறார்.

நர்ஸ் உடனடியாக, டாக்டரைக் கூப்பிட அவரும் குழந்தைக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி பிறந்து நான்கு நாள்களே ஆன அந்த சிசு இறந்துபோய்விட்டது. ஆரோக்கியமா இருக்கும் சிசுவுக்குத் திடீரென எப்படி மூச்சுத்திணறல் ஏற்படும் என்ற சந்தேகம் சிகிச்சை அளித்த டாக்டருக்கு ஏற்பட்டிருக்கிறது. சரண்யாவை அவர் தீவிரமாக விசாரிக்க, அவரோ முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியிருக்கிறார். குழந்தையைச் சரண்யாவே மூச்சுத் திணறலை ஏற்படுத்திக்கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அறந்தாங்கி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துவிட்டார் மருத்துவர். விரைந்து வந்த போலீஸார் சரண்யாவை விசாரித்தபோது, குழந்தையைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டுவிட்டார். மேற்கண்ட தகவல்களைக் கூறிய போலீஸார், "உண்மையில் அந்தக் குழந்தை கார்மேகத்துக்கும் சரண்யாவுக்கும் பிறந்ததுதானா, எதற்காகக் குழந்தையைக் கொன்றார். வேறு பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் விசாரித்து வருகிறோம்" என்றார்கள். போலீஸார், சரண்யாவையும் கார்மேகத்தையும் போட்டோ எடுக்க யாரையும் அனுமதிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!