வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (31/01/2018)

கடைசி தொடர்பு:18:20 (31/01/2018)

வீட்டிலிருந்து தெறித்து ஓடிய பெண் கஞ்சா கும்பல்! சிக்கிக்கொண்ட 2 பேர்

           

மதுரையில் கஞ்சா விற்பனை அமோகமாக அரங்கேறிவருதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. குறிப்பாக அழகர்கோயில், சத்திரப்பட்டி, தத்தநேரி உள்ளிட்ட பல பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்புச் சோதனைகளில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சோதனையைத் தெரிந்துகொண்ட கஞ்சா வியாபாரிகள் சற்று அமைதிகாத்துவந்தனர்.

இந்நிலையில் காஞ்சரம்பேட்டை பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்த லெட்சு (65),  ரேணுகா (30) ஆகிய இருவரையும் கைது செய்ய அவர்களது வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், காவல்துறை வருகையைத் தெரிந்துகொண்ட இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். வீட்டில் அவர்கள் பதுக்கிவைத்திருந்த கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர்.

மேலும் இருவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். அதேபோல் காஞ்சரம்பேட்டை ஆட்டோ ஸ்டாண்டு அருகே வைத்து கஞ்சா விற்கும் தீபக் (21), ராஜேஷ் (21) ஆகிய இளைஞர்கள் கஞ்சாவை விற்பனை செய்யும்போது கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மதுரையில் கஞ்சா விற்கும் கும்பல் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இக்கும்பலைச் சார்ந்த பலரையும் போலீஸ் தேடிவருகிறது .