வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (31/01/2018)

கடைசி தொடர்பு:19:40 (31/01/2018)

பத்திரப்பதிவுக்கு 5,000; பதிவுத் திருமணத்துக்கு ரூ.2,000 - வில்லங்க சார்பதிவாளர் அலுவலகம்

பத்திரப்பதிவு செய்ய 5,000 ரூபாய், பதிவுத் திருமணம் செய்ய 2,000 ரூபாய் என எதற்கெடுத்தாலும் பணம் கேட்பதாக மீன்சுருட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தைப் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராகத் தனபால் என்பவர் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பத்திரப் பதிவு, பதிவுத் திருமணம், நிலத்துக்கு வில்லங்க சான்றிதழ் மற்றும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தில் இவருக்கு கீழ் போதிய அலுவலர்கள் இல்லாததால் எந்த வேலையும் சரிவர நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல நாள்களாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் வழக்கம்போல் சார்பதிவாளார் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் அவரது நிலத்தை விற்க பதிவு செய்ய வந்துள்ளார். அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து அலுவலகத்தில் பதிவு செய்ய கொடுத்துள்ளனர். அலுவலகத்தில் யாருமில்லை மதியம் வாங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதே போல் பதிவு திருமணம் செய்வதற்காக ஒரு தரப்பினர் வந்திருக்கிறார்கள். சார்பதிவாளர் தனபாலனுக்கு ஆன்லைனில் கம்ப்யூட்டர் இயக்க தெரியாததால் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

கடுப்பில் அவர்கள் நாளை வருவதாகச் சொல்லி சென்றிருக்கிறார்கள். பிரபு மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது. அங்கிருந்தவர்கள் ஆட்கள் இல்லை; நாளைக்கு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆத்திரமடைந்த பிரபு உங்களுக்கு பணத்தைக் கொடுத்தால் உடனே செய்துகொடுப்பீர்கள். நான் பணம் கொடுக்கவில்லை என்பதற்காகவே இழுத்து அடிக்கிறீர்களா எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் 5,000-மும் பதிவுத் திருமணம் செய்ய வருபவர்களிடம் 2,000 ரூபாயும் கேட்பதாகக் கோஷமிட்டனர். தகவலை அறிந்து வந்த மீன்சுருட்டி போலீஸார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரப்பதிவை உடனடியாகச் செய்துகொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.