வெளியிடப்பட்ட நேரம்: 19:03 (31/01/2018)

கடைசி தொடர்பு:19:03 (31/01/2018)

"பப்ளிக் எக்ஸாம் வரப் போகுது சார்!" - நீதிபதியிடம் கெஞ்சிய ஸ்ருதி தம்பி

திருமண மோசடி நடிகை ஸ்ருதி 

'திருமணம் செய்துகொள்கிறேன்' என்று ஐ.டி இளைஞர்கள் பலரை  ஏமாற்றிப் பணம் பறித்த  வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்  நடிகை ஸ்ருதி! இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாகக்கூறி ஸ்ருதியின் குடும்பத்தாரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்ருதி குடும்பத்தார் போலீஸாருக்கு கொலை மிரட்டல் செய்ததான வழக்கில், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை அவர்கள் அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

சேலத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான  பாலமுருகன், 'மைதிலி என்கிற நடிகை ஸ்ருதி'  தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி  41 லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்துவிட்டதாக  கோவை மாநகரக் குற்றப்பிரிவுப் போலீஸில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். அந்தப் புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து   நடிகை ஸ்ருதி மற்றும்  அவரது குடும்பத்தினரைத் தேடி வந்தது போலீஸ். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில்  ஸ்ருதி இருப்பதைக்  கண்டுபிடித்த போலீஸார்,  கடந்த 10 ஆம் தேதி, அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மஃப்டியில் விரைந்தனர் .  வீட்டில்  ஸ்ருதி, அவரது அம்மா சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்புத் தந்தை பிரசன்ன வெங்கடேஷ் (சித்ராவின் இரண்டாவது கணவர்)  மற்றும் ஸ்ருதியின்  நண்பர் சபரிநாத் ஆகியோர் வீட்டில் இருந்திருக்கிறார்கள். அவர்களிடம்   திருமண மோசடி குறித்து விசாரித்திருக்கிறது போலீஸ்.  அப்போது, வீட்டில் இருந்த அனைவரும் சேர்ந்து  போலீஸாரை மிரட்டியிருக்கிறார்கள்.  ஸ்ருதியின் நண்பர் சபரிநாத்  கஸ்டம்ஸ் ஆபிஸரின்  மகன் என்பதால், பயமில்லாமல்  போலீஸாரைத் தாக்க முயற்சித்திருக்கிறார்.  அதில்,   சாகுல் அமீது என்கிற ஏட்டு கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

 

இதையடுத்து, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அனைவரையும் கைது செய்தது போலீஸ்.   சபரிநாத் மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் திருமண மோசடிகள் குறித்த விசாரணை நடந்து வந்தது. பாலமுருகனைப்போல பல ஐ.டி இளைஞர்களை மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக தொடர்புகொண்டு திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாயையும் சுருட்டிக்கொண்டு ஸ்ருதியும் அவரது குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தகவல்கள்  போலீஸ் விசாரணையில் அம்பலமாகி அதிரவைத்தது. இந்நிலையில், போலீஸாரை மிரட்டிய வழக்கு தொடர்பாக ஸ்ருதி  அவரது அம்மா சித்ரா, தம்பி சுபாஷ், மற்றும்  வளர்ப்புத் தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர்  கோவை ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நீதிபதி வேலுச்சாமி முன்னிலையில் நேற்று  ஆஜர்படுத்தப்பட்டனர். 

 

அப்போது, ஸ்ருதி தம்பி சுபாஷ்  நீதிபதியிடம், “சார்  நான் பிளஸ் டு படிச்சிக்கிட்டு இருக்கேன் சார்.  இன்னும் கொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வரப்போகுது. இந்த வழக்கு தொடர்பா ஜெயில்ல  இருப்பதால், என்னால்  படிக்க முடியல சார். என்னோட படிப்பு போயிடுமோன்னு பயமா இருக்கு. என் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு எனக்கு ஜாமீன் கொடுங்க சார்...''  என்று  முறையிட்டார். அதற்கு   நீதிபதி, ''ஜாமீன் கேட்டு மனுவாகத் தாக்கல் செய்யும்படி உங்கள் வக்கீலிடம் சொல்லுங்கள்'' என்று சுபாஷிடம் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து   நடிகை ஸ்ருதி உள்ளிட்ட  நால்வரையும் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வரையில், நீதிமன்றக் காவலில் வைக்கும்படி  உத்தரவிட்டார். ஏற்கெனவே இந்த நால்வரும் திருமண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங் @ விகடன்