காந்தியைக் கொன்றது யார்? காந்தி நினைவு நாளில் பரபரத்த விவாதம்

காந்தி

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 70 ஆவது நினைவு நாளான நேற்று (30-01-2018) இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் நினைவஞ்சலி செலுத்தினர். காந்தியின் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று பெரம்பூர் - பெரவள்ளூர் சதுக்கத்தில், 'காந்தியார் நினைவு நாள் கருத்துரிமைப் பாதுகாப்பு - மதவெறி கண்டன திறந்தவெளி மாநாடு' நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன், திராவிட இயக்கத் தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஆரம்பித்து தற்போதைய இந்துத்துவா கோஷம், கருத்துரிமைக்கு எதிரான நிலை போன்ற ஆழமான கருத்துகள் இதில் பேசப்பட்டன. மேலும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகப் பேசிய ஹெச்.ராஜா மற்றும் ஜீயருக்கும் பதிலடி கொடுத்தனர்.

காந்தியின் நினைவு நாள் மாநாடு

மாநாட்டில் கலந்துகொண்ட சுப.வீரபாண்டியன் பேசியபோது, "காந்திக்கும், நமது இயக்கத்துக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் காந்தியார் மிகவும் மகத்தான தலைவர். அவர் கொலை செய்யப்பட்டதென்பது ஒரு தனிநபர் கொலையல்ல. அது ஒரு மதவெறி கொலை. தற்போது இருக்கும் காலகட்டம் என்பது ஒரு மதவெறி காலக்கட்டம். அந்த மதவெறிக்கு ஒருபோதும் நாம் ஆதரவு அளிக்கக்கூடாது. வைரமுத்துவின் பிரச்னையில் யார் யாரோ என்னவோ சொல்கிறார்கள். வைரமுத்துவை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு பேசுகிறார்கள். கல்லெறிவோம், சோடா பாட்டில் வீசுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நீங்களே சோடா பாட்டில் எடுத்தால், நாங்கள் என்ன எடுப்போம் என்று நினைத்துப் பாருங்கள். இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டும் பி.ஜே.பி-யினால் காலூன்ற முடியவில்லை. அதனால் தற்போது அவர்கள் 'ப்ராஜக்ட் தமிழ்நாடு' என்ற ப்ராஜக்டை கையிலெடுத்துள்ளார்கள். இதன் நோக்கம் தமிழ் நாட்டுக்குள் எப்படியாவது பி.ஜே.பி காலூன்ற வேண்டும் என்பதே. அதற்கு ஒருபோதும் நாம் வாய்ப்பளித்துவிடக்கூடாது." என்றார்.

மாநாட்டில் பேசிய திருமாவளவன், " காந்தியை சுட்டவன் யார்? இடதுசாரிகளா? அம்பேத்கர் வழி வந்தவர்களா? ஒரு இஸ்லாமிய சகோதரனா? அல்லது இந்துமதம் அல்லாத வேறொரு நபரா? இதில் யாருமில்லை. காந்தியைப் படுகொலை செய்தது இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான். நாடு முழுவதும் சென்று ராமனைப் பற்றி பரப்புரை செய்து, மூச்சுக்கு முன்னூறு தடவை ஹேராம் சொல்லிய ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் காந்தி. அப்படிப்பட்ட ஒருவரை சுட்டுக்கொன்றது இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றால் அவர்களின் நோக்கம் என்ன? நாம் ஏன் பாரதிய ஜனதாவை எதிர்க்க வேண்டும்? ஆர்.எஸ்.எஸ். தாய். அதன் திட்டங்களை நிறைவேற்றுவது பாரதிய ஜனதா. அதனால்தான் இதை எதிர்க்க வேண்டும். இதற்கு முன் 'இந்து கோவிலை இடிக்க வேண்டும் என்று நான் சொன்னதாகச் சொன்னார்கள். அதனால் என் படத்தைப் பலர் செருப்பால் அடித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதாக நான் கேள்விப்பட்டேன். உண்மையில் நான் அப்படிச் சொல்லவில்லை. 'பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகச் சொல்லி அதை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அப்படியானால் இன்று சிவன், பெருமாள் கோவில்கள் இருந்த இடமெல்லாம் அன்று பெளத்த மதம், சமண மதம் கோவில்கள் இருந்த இடம். இவர்களும் அப்படிச் சொன்னால், இன்று சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் இங்கு இருக்க முடியாது' என்றுதான் சொன்னேன் " 

காந்தியின் நினைவு நாள் மாநாடு

கி.வீரமணி பேசியபோது, "காந்தியின் நினைவு நாளை திராவிடர் கழகம் ஏன் நடத்த வேண்டும்? வாழ்ந்த காந்தியார் வேறு, மறைந்த காந்தியார் வேறு. வாழ்ந்த காந்தியார் வருணாசிரம முறைப்படி வாழ்ந்தவர். ஆனால், இறந்தவர் இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு - கடைசிப் பருவத்தில் அவர் வலியுறுத்திய மதச் சார்பின்மை கொண்டவர். பெரியாருக்கும் காந்திக்கும், அம்பேத்கருக்கும் காந்திக்கும் நிறைய கருத்துவேறுபாடுகள் உண்டு. அம்பேத்கர் காந்தியைக் காப்பாற்றினார். ஆனால், பார்ப்பான் காந்தியைக் கொன்றான். காந்தி இறந்தபோது மராட்டியத்தில் மிகப்பெரிய கலவரம் உருவானது. அதேபோல தமிழகத்திலும் அந்தக் கலவரம் பெரிதாக வெடிக்கப் பார்த்தது. அந்த நேரத்தில் பெரியார் அவர்கள் வானொலியில் ஆற்றிய உரையின் காரணமாகவே அந்தக் கலவரம் தமிழகத்தில் நடக்கவில்லை. அன்று மட்டும் பெரியார் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், இன்று அவர்கள் கல்லெறிவேன், சோடா பாட்டில் எறிவேன் என்றெல்லாம் சொல்லியிருக்க முடியாது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!