150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது! மக்கள் ஆர்வம்

150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அபூர்வ சந்திர கிரகணம் தொடங்கியது. பூமி, நிலவு மற்றும் சூரியன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போதுதான் கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது.

முழு சந்திர கிரகணம், பிளட் மூன், சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக நிகழ்வதுதான் இந்த அபூர்வ சந்திர கிரகணம். சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது அப்பொழுது பூமியின் நிழல் நிலவின்மீது விழும். சூரியனுக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும் பொழுதுதான் சாத்தியம் என்பதால் எப்போதும் பௌர்ணமி நாளில்தான் சந்திர கிரகணம் நடைபெறும்.

மாலை 5.18 மணி அளவில் தொடங்கிய இந்தச் சந்திர கிரகணம் இரவு 8.41 மணி வரை நிகழும். கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றும் மாலை 6.21 மணிக்கு தெளிவாகவும் இரவு 7.37 மணிக்கு முழு சந்திர கிரகணத்தைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  சென்னை உட்பட பல இடங்களில் இதைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரிய சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்காகச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மக்கள் குவிந்துள்ளனர். இதேபோல் சென்னை மெரினா கடற்கரை உட்பட பல பகுதிகளிலும் இந்த அரிய சந்திர கிரகணத்தைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். முன்னதாக இன்றைய சந்திர கிரகணம் குழந்தைகளுடன் ரசிக்க வேண்டிய அரிய நிகழ்வு என்றும் வீட்டுக்குள் சென்று மறைய தேவையில்லை என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!