தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல்..! அதிர்ச்சியில் இளம் வழக்கறிஞர்கள்

தமிழ்நாடு பார் கவுன்சில்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28- ம் தேதி நடைபெறும் என்று அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. 15- ம் தேதி வரை மனுத் தாக்கல் செய்யலாம். மனுவை வாபஸ் பெற 22 -ம்  தேதி கடைசி நாள். 23- ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மார்ச் 1 ஆம் தேதி போட்டியிடுவோர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு பார் கவுன்சில் ஸ்பெஷல் கமிட்டி, கடந்த 24.01.2018 அன்றையக் கூட்டத்தின் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் விதிகள் திருத்த தீர்மானத்தை அகில இந்திய பார்கவுன்சில் அனுமதிக்காக அனுப்பிவைத்துள்ளது. அந்த திருத்த தீர்மானத்தின் மூலம் புதிதாக விதிகள் 7A, 7B & 7C ஆகியவை சேர்க்கப்பட உள்ளன. இந்தத் திருத்த விதிகள் யாவும் குறிப்பாக விதி 7A இளம் வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சொல்கிறார்கள். 

சுனில் ராஜா இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சுனில் ராஜா-விடம் கேட்ட போது, ''உலக அளவில் இந்தியா அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு. எந்தவொரு மாற்றமும் இளைஞர்களால்தான் காண இயலும் என்று தற்போது அனைத்துத் துறையிலும் இளம் வயதினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கறிஞர் சமூகத்தில் மட்டும் இளம் வழக்கறிஞர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவம் மறுக்கப்படும் வகையில் விதிகள் உருவாக்கப்படுவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பத்து ஆண்டுகளுக்குக் குறைவாக அனுபவமுடைய வழக்கறிஞர்கள் எண்ணிக்கை சுமார் 14,000 பேர். அதாவது, மொத்த வழக்கறிஞர்கள் எண்ணிக்கையில் சுமார் 25 சதவிகிதம் பேர் இளம் வழக்கறிஞர்கள். தற்போது கொண்டுவரப்படும் திருத்த விதி அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாடு பார் கவுன்சிலில் மேற்படி 25 சதவிகித இளம் வழக்கறிஞர்களின் பிரதிநிதித்துவம் முற்றிலும் மறுக்கப்படும். ஏற்கெனவே, இளம் வழக்கறிஞர்கள் நாளுக்கு நாள் வழக்கறிஞர் தொழிலில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது இளம் வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது எங்களைப் போன்ற இளம் வழக்கறிஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!