மூட நம்பிக்கைகளை ஒழிக்க நிலாப் பொங்கல் நிகழ்வு..! புதுக்கோட்டையில் அசத்தல் முயற்சி

சந்திரகிரகணத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிலாப் பொங்கல் நிகழ்வை நடத்தினர்.

சூரியன், பூமி, நிலா மூன்று ஒரே நேர்கோட்டில் வரும் சந்திர கிரகண நிகழ்வு நேற்று நடைபெற்றது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் நிகழ்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், ஆன்மிக நம்பிக்கைகளில் தீவிர நம்பிக்கைக் கொண்டவர்கள், ராகு,கேது என்ற என்பவற்றுடன் இந்தச் சந்திரகிரகணத்துடன் ஒப்பிட்டு, வெளியில் நடமாடாமலும் தண்ணீர்கூட அருந்தாமலும் விரதம் இருப்பார்கள். கிரகணம் முடியும்வரை பிரபல கோயில்களின் நடை சாத்தப்பட்டிருக்கும். சந்திரகிரகணம் முடியும் வரை பல ஊர்களில் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுபோன்ற நம்பிக்கைகளை உடைக்கும் விதமாக, இன்று இந்த நிலாப்பொங்கல் வைபவம் நடந்தது.

தொடக்கநிகழ்வாக, மாலை ஐந்து மணிக்கு மேல் டி.வி.எஸ்.ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகில் உள்ள சிறு திடலில் பொங்கல் வைக்கப்பட்டது. அப்போது அந்தக் குடியிருப்பில் உள்ளவர்கள் கொஞ்சம் பேர் மட்டுமே வந்திருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல கூடுதலான நபர்கள் அங்கே கூட ஆரம்பித்தார்கள். பொங்கல் தயாரானதும் அவற்றை எடுத்துக்கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மொட்டை மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே வைத்து பெரிய நிலா வெளிச்சத்தில் எல்லோருக்கும் நிலாப் பொங்கல் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சந்திரகிரகணத்தைப் பார்ப்பதற்கு வசதியாக டெலஸ்கோப்பும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த 'சந்திரகிரகணப் பொங்கல்' நிகழ்வை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இணைச் செயலாளர் உஷா நந்தினியிடம் பேசினோம். அப்போது அவர், 'சந்திர கிரகணம், சூரியகிரகணம் வந்துவிட்டாலே தெருக்களில் ஆள் நடமாட்டம் இருக்காது. வீடுகளில் பலரும் கிரகணம் முடியும்வரை சமைக்கமாட்டார்கள். இன்னும் பலர், மௌன விரதம் இருப்பார்கள். கிரகணம் முடிந்ததும் வீட்டைக் கழுவிவிட்டு, தாங்களும் குளித்துவிட்டு, பூஜை விஷயங்களை எல்லாம் நிறைவேற்றிவிட்டு அதன்பிறகே சமைக்க ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற பதற்றமான நம்பிக்கைகளை கடைபிடிக்கும் அளவுக்கு ஆபத்தான நிகழ்வுகள் ஒன்றும் இந்தக் கிரகணங்களால் ஏற்பட்டுவிடாது. எப்போதும் உள்ள நாள்கள் போன்றதுதான் இதுவும். கிரகணம் நேரத்தில் வெளியே வரக்கூடாது. அப்படி வந்தால் குடும்பத்துக்கு ஆகாது. தோஷம் பிடித்துவிடும் என்று கூறப்படுவதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள். அவற்றை உடைக்கும் முயற்சியாக இந்தச் சந்திரகிரகணம் பொங்கல் நிகழ்வை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று நடத்தியிருக்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!