நியூட்ரினோ ஆய்வு மையத்தால் தமிழகத்தில் மழை வளம் பறிபோய்விடும்.! பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில் மத்திய அணுசக்திதுறை திட்டமிட்ட நியூட்ரினோ ஆய்வு மையப் பகுதிகளை இன்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆய்வுசெய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய பி.ஆர்.பாண்டியன், ``நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் தமிழகத்தில் மழை வளம் முற்றிலும் அழியும்.

இதனால் பேரழிவு ஏற்படும். இப்பகுதியில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் மேற்குத் தொடர்ச்சி மலையின் மரங்கள் அழிக்கப்படும். ஆய்வுப் பணியில் பாறைகள் உடைக்கப்படும்போது மலைப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படும். இதனால் அணைகள் உடையும் அபாயம் உள்ளது. விலங்குகள், குடியிருப்புகள் இல்லாமல் போகும். மத்திய அரசு ஒட்டுமொத்தத் தமிழகத்தை கதிரியியக்க ஆய்வுக்களமாக உருவாக்க முயற்சிப்பதை ஏற்க இயலாது. உலகத்தில் 7 நாடுகளில் இத்திட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா தவிர்த்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும் கடலுக்கடியிலும், மக்கள் வசிக்காத பாலைவனப் பகுதிகளிலும் துவங்கியுள்ளனர். ஏன் தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் வசிக்கும் வாழ்வாதாரப் பகுதிகளில் அனுமதிப்பது ஏன்?" என்று பேசினார். அவருடன் மாநிலத் துணைச் செயலாளர் எம்.செங்குட்டுவன், மதுரை மண்டல துணைத் தலைவர் திருப்பதி வாசகன், தஞ்சை மண்டலத் தலைவர் டி.பி.கே.இராஜேந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் எஸ்.இராமதாஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!